வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலுமாக ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முன்னென்றும் இல்லாத வகையில் பெருவாரியான தமிழ் அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் போட்டியிடுவதன் காரணமாக அடுத்த பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாரதூரமான அளவுக்கு சிதறடிக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் நலன்களில் மானசீகமான அக்கறை கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் துரதிர்ஷ்டவசமான நிலவரம் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தகைய ஒரு பின்புலத்தில், தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிவஞானம் சிறீதரனும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறித்துத் தெரிவித்திருக்கும் கருத்துகள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இந்தத் தடவை பாராளுமன்றத்துக்கு 18 தமிழ் உறுப்பினர்கள் தெரிவாகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் அதில் பத்து ஆசனங்களை கைப்பற்றும் இலக்குடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனவும் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நேற்றைய தினம் வழங்கிய நேர்காணலில் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.
இதேவேளை, கடந்த வாரம் யாழ். நகரில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற தமிழ் அரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய சிறீதரன் இந்தத் தடவை தங்களது கட்சிக்கு பாராளுமன்றத்தில் 15 ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என்று தனது எதிர்பார்ப்பையும் வெளியிட்டார். பொன்னம்பலத்தையும் சிறீதரனையும் பொறுத்தவரை, தங்களது கட்சிகள் தமிழ்ப் பகுதிகளில் எத்தனை ஆசனங்களைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுவதற்கு உரிமை இருக்கிறது. அதை யாரும் கேள்விக்கு உட்படுத்தமுடியாது. ஆனால், வடக்கு – கிழக்கின் இன்றைய அரசியல் சூழ்நிலையை சரியாகப் புரிந்து கொண்டுதான் அவர்கள் இருவரும் கருத்துகளை வெளியிடுகிறார்களா என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசு கட்சியையும் உள்ளடக்கியதாக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பத்து ஆசனங்களே கிடைத்தன. அதேவேளை, பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் ஓர் ஆசனத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. தேசிய ரீதியில் அந்தக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் மூலமாக ஓர் ஆசனம் கிடைத்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றைய தமிழ்க் கட்சிகள் போன்று சிதறுப்படாமல் மட்டுப்படுத்தப்பட்ட அளவு உறுப்பினர்களுடன் கட்டுக்கோப்பாக இருப்பதால் முன்னைய பாராளுமன்றத் தேர்தல்களை விடவும் இந்தத் தடவை தமிழ் மக்கள் தங்களுக்கு கூடுதலான ஆதரவைத் தருவார்கள் என்று பொன்னம்பலம் நம்புகிறார் போலும்.
ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏனைய அங்கத்துவக் கட்சிகளை விட்டு, கடந்த வருட முற்பகுதியில் வெளியேறி – தனித்துச் செயல்பட்டு வந்த தமிழ் அரசுக் கட்சி அதன் சுமார் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் முன்னென்றும் இல்லாத அளவுக்கு தலைமைத்துவ போட்டியின் விளைவாக உட்பூசலில் சிக்குப்பட்டிருக்கும் ஒருநேரத்தில் 15 ஆசனங்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சிறீதரன் எந்த அடிப்படையில் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார் என்று உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை.
தங்களுக்குள் நிலவும் பூசல்களை தமிழ் மக்கள் கருத்தில் எடுக்காமல் தமிழ் அரசு கட்சியின் பாரம்பரியத்துக்காக தொடர்ந்தும் ஆதரவைத் தருவார்கள் என்று சிறீதரன் நம்புகிறாரோ? இந்தத் தடவை பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கின் ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடும் தமிழ்க் கட்சிகள், குழுக்களின் எண்ணிக்கை உண்மையில் தமிழ் மக்களின் விவேகத்தை ஏன் பகுத்தறிவையும்கூட அவமதிப்பதாக அமைந்திருக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் ஆறு ஆசனங்களுக்கு 400 வரையான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ் மக்களின் ஐக்கியத்தின் அவசியத்தை பேசிக்கொண்டே தினமும் தமிழ்க் கட்சிகள் சிதறிக்கொண்டிருக்கின்றன. அடுத்த பாராளுமன்றத்தில் தங்களுக்கு கட்டுக்கோப்பான ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடிய ஆபத்தை உணர்ந்தவர்களாக இரு மாகாணங்களினதும் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துவார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், முன்னொருபோதும் இல்லாத வகையில் தமிழ் அரசியல் ‘வெளிப் பணத்துக்கு’ வாலாட்டும் பிரகிருதிகளின் கையில் சிக்கியிருக்கிறது.