25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இங்கிலாந்தை வெளியேற்றி அரை இறுதிக்குள் நுழைந்தது மே.தீவுகள்: தென் ஆபிரிக்காவும் அரை இறுதி வாய்ப்பைப் பெற்றது

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில்  செவ்வாய்க்கிழமை (15) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண பி குழுவுக்கான கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட்களால் வெற்றிகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இப் போட்டியில் இங்கிலாந்து தொல்வி அடைந்ததால் பி குழுவிலிருந்து இரண்டாவது அணியாக தென் ஆபிரிக்கா அரை இறுதி வாய்ப்பை பெற்றுக் கொண்டது. தென் ஆபிரிக்காவும் இங்கிலாந்தும் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருந்தன. ஆனால், நிகர ஓட்ட வேக அடிப்படையில் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 2ஆம் இடத்தைப பெற்றது.

அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ், கியானா ஜோசப் ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்களைக் குவித்ததுடன் ஆரம்ப விக்கெட்டில் 74 பந்துகளில் பகிர்ந்த 102 ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை இலகுபடுத்தியது.

அத்துடன் இங்கிலாந்து 5 பிடிகளைத் தவறவிட்டது அதன் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது. பி குழுவில் தோல்வி அடையாத அணியாக இருந்த இங்கிலாந்து கடைசிப்  போட்டியில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தது.

ஆனால், இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 142 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 18 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

ஹெய்லி மெத்யூஸ், கியானா ஜோசப் ஆகிய இருவரும் பவர் ப்ளேயில் 67 ஓட்டங்களை விளாசியதன் பலனாக மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பம் அமோகமாக இருந்தது. மொத்த எண்ணிக்கை 102 ஒட்டங்களாக இருந்தபோது கியானா ஜோசப் முதலாவதாக ஆட்டம் இழந்தார். அவர் 38 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

சொற்ப நேரத்தில் ஹெய்லி மெத்யூஸ் 38 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (104 – 2 விக்.) மொத்த எண்ணிக்கை 136 ஓட்டங்களாக இருந்தபோது ஷேர்மெய்ன் கெம்பல் (5), டியேந்த்ரா டொட்டின் (27) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஆனால் அது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 5 ஓட்டங்களை ஆலியா அலின் (8 ஆ.இ.) 2 பவுண்டறிகளை விளாசி பெற்றுக்கொடுத்தார்.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் களத்தடுப்பை தெரிவு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஏழாவது ஓவரின் முதல் பந்தில் அதன் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களாக இருந்தது.

அப்போது ஜோடி சேர்ந்த நெட் சிவர் ப்ரன்ட், அணித் தலைவி ஹீதர் ப்ரன்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக உபாதைக்குள்ளான ஹீதர் நைட் 21 ஓட்டங்களுடன் ஓய்வுபெற நேர்ந்தது.

அது இங்கிலாந்துக்கு பெரும் தாக்கத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அதன் பின்னர் சீரான இடைவெளியில் 4 விக்கெட்கள் சரிந்தன.

ஒரு பக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நெட் சிவர் ப்ரன்ட் 57 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அஃபி ஃப்ளெச்சர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹெய்லி மெத்யூஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles