அரசன் அன்றறுப்பான் – தெய்வம் நின்றறுக்கும் என்றொரு கூற்றுண்டு.
அதேபோன்று, மேற்குலக சக்திகள் எப்போது – எவ்வாறு செயல்படும் என்பதை அவர்கள் மட்டுமே அறிவார்கள்.
அவர்களுக்குத் தெரியும் எப்போது இறுக்க வேண்டும் – எப்போது தளர்த்த வேண்டும் என்பது.
முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்ஷ சகோதரர்கள் இருவர்மீதும் ஒரே நேரத்தில் கனடிய அரசு தடை வித்திருக்கின்றது.
ஒருவேளை, கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையுடன் இருந்திருந்தால் இவ்வாறானதொரு தடையை கனடிய அரசு வித்திருக்காது.
ஓர் அமெரிக்கர்மீது கனடிய அரசால் தடைவிதிக்க முடியாது.
ஆனால், சரியானதொரு தருணம் பார்த்து இரண்டு சகோதரர்கள் மீதும் ஒரேநேரத்தில் கனடிய அரசு பாய்ந்திருக்கின்றது.
கோட்டாபயவுக்கு அரணாக இருப்பார் என்னும் நம்பிக்கையில், வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி விழிபிதுங்கிக் கிடக்கின்றார்.
அலி சப்ரி மட்டுமல்ல, ஜீ. எல்.எபீரிஸ் இருந்திருந்தாலும் – வேறு எந்த சிங்கள நிபுணர் இருந்திருந்தாலும்கூட நடக்க வேண்டியது நடந்தேதீரும்.
ஏனெனில், அது மேற்குலக மூலோபாய வடிவமைப்போடு தொடர்புபட்டது.
அதனை ஒரு சிறிய நாட்டின் வெளிவிவகார அமைச்சரால் தடுத்துவிட முடியாது.
இந்த சம்பவத்துக்கும் புலம்பெயர் சமூகத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் புலம்பெயர் சமூகத்தைத் திருப்திப்படுத்தவே இவ்வாறானதொரு தடையை
கனடிய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் தென்னிலங்கையில் உள்ளவர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதனால், புலம்பெயர் சமூகத்தில் உள்ளோர் பூரித்துப் போயிருக்கின்றனர்.
அவர்களும் இதனை நம்புகின்றனர் – கனடிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
ஆனால், உண்மையோ, இவ்வாறான நம்பிக்கைகளுக்கும் – கற்பனைகளுக்கும் அதிக தொலைவில் இருக்கின்றது.
கனடிய அரசியல்வாதிகள் புலம்பெயர் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்குவைத்து பேசுவதும் – செயல்படுவதுமுண்டுதான்.
ஆனால், கனடிய அரசின் அணுகுமுறை என்பதற்கும் – வாக்குகளை இலக்கு வைக்கும் அரசியல் வாதிகளின் அணுகுமுறைக்கும் அதிக வேறுபாடுகளுண்டு.
இதே புலம்பெயர் சமூகம் விடுதலைப் புலிகள்மீதான தடையை நீக்குமாறு கோரி பல வருடங்களாக குரலெழுப்பி வருகின்றது.
அதனை கனடிய அரசு கருத்தில் கொள்ளவில்லை.
ஏனெனில், எதனை எப்போது செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதற்கான அழுத்தங்களை வெளியிலிருந்து எவருமே வழங்க முடியாது.
அது பிராந்திய, உலகளாவிய நலன்களிலிருந்தே தீர்மானிக்கப்படுகின்றன.
கனடாவைப் பொறுத்தவரையில், அமெரிக்காவின் பசுபிக் மூலோபாய வளையத்திற்குள் இருக்கும் நாடது.
அமெரிக்காவின் ஆலோசனையின்றி அங்கு எதுவும் நகராது.
அமெரிக்க ஆலோசனையின்படிதான், கனடாவின் நகர்வுகள் நடைபெறும்.
ஒருவேளை விடுதலைப் புலிகள்மீதான தடையை கனடா நீக்கினால், இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் குரலெழுப்பும் தகுதியை கனடா இழந்துவிடும்.
இவ்வாறுதான் விடயங்களை நோக்க வேண்டும்.
சர்வதேச சக்திகளின் மூலோபாய நகர்வுகளை கொழும்பால் தடுத்து நிறுத்திவிட முடியாது.
அவ்வாறு எண்ணினால் அது மடமை.
ஆனால், சர்வதேச ஒழுங்குக்கு உள்ளிருக்கும் ஒரு நாட்டின்மீது அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய எல்லைக்குள்தான் வெளித்தரப்புக்கள் செயலாற்றும்.
ஒருவேளை, கோட்டாபய ஜனாதிபதியாக இருந்திருந்தால் இவ்வாறானதொரு தடையை விதித்திருக்க முடியாது.
ஏனெனில், அது இலங்கையுடனான உறவை முற்றிலும் பாதித்துவிடும்.
கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு இழக்கும் வரையில் காத்திருந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இதன் மூலம் தென்னிலங்கைக்கு ஒரு தெளிவான செய்தி வழங்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை கொழும்பு நாடிக்கொண்டிருக்கும் நிலையில்தான் ஆளும் தரப்பாக இருக்கும் பொதுஜன பெரமுனவின் போசகர் மகிந்த ராஜபக்ஷவை மனித உரிமைகள் மீறல் குற்றவாளியென்று கனடா அறிவித்திருக்கின்றது.
ஆனால், பஸில் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை.
மேலும் அவர் ஓர் அமெரிக்கரும்கூட.