25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இப்படியும் நடக்கிறது…!

ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் இந்தியாவுக்கு சென்றிருப்பது குறித்து இந்தப் பந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை எழுதியிருந்தேன்.
இவர்களின் இந்த திடீர் இந்திய விஜயம் யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறித்த சந்தேகத்தையும் அதில் எழுப்பியிருந்தது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.
புதுடில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் அங்கு சென்றிருக்கின்ற விடயம் இப்போது தெரிய வந்திருக்கின்றது.
தமிழகத்தில் வாழும் தமிழ் அரசியல் மதியுரைஞர் ஒருவர், இங்கு வாழ்ந்தபோது விடுதலைப் புலிகளின் ஆஸ்தான அரசியல் ஆய்வாளராக இருந்தவர்.
விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து அங்கு வாழ்ந்துவரும் அவர், இப்போது இந்தியாவின் உதவியுடன்தான் ஈழத்தமிழர்கள் உரிமைகளைப் பெறலாம் என்று நம்புகின்றார்.
கவிஞர் காசி ஆனந்தன் போன்றவர்களும் அதனை நம்புவதால்தான் அவர் இந்துத் தமிழீழம் என்ற கோஷத்தை முன் வைத்திருந்தாரோ தெரியவில்லை.
தமிழகத்தில் வாழும் அந்த அரசியல் ஆய்வாளர், தனது கருத்துக்களோடு உடன்படுகின்றவர்களை தனது சீடர்களாக உருவாக்கியும் வருகின்றார்.
அவ்வாறு அவரால் உருவாக்கப்பட்டவர்கள் சிலர் இந்தியாவில் உள்ள ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் உள்ளூர் தலைவர்களுடனும் தொடர்பில் இருக்கின்றனர்.
லண்டனிலிருந்து அடிக்கடி இந்தியா செல்லும் சிலர் அந்த அரசியல் ஆய்வாளரின் கருத்துக்களோடு உடன்படுகின்றவர்களாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.
இவ்வாறு லண்டனிலிருந்து சென்ற முக்கிய பெண்மணி ஒருவர், புதுடில்லியில் ‘ஈழத்தமிழர் பிரச்சினைகளும் இந்தியாவும்’ என்ற கருப்பொருளில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அந்தக் கருத்தரங்கில் மிகக்கீழ் மட்டத்திலுள்ள ஒரு சில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
சென்னையிலிருந்து கல்விச் சுற்றுலா சென்றிருந்த மாணவர்கள் குழு ஒன்றும் அந்த கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்ததாகத் தெரியவருகின்றது.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் அங்கு சென்றிருக்கின்றனர்.
அதாவது அந்தக் கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களே இவர்களை அழைத்திருந்தனர்.
அங்கு சென்ற ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் ஐவர் புதுடில்லி வீதியில் ‘கோட்டும் ரை’யுமாக நடந்து செல்கின்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
மாநாட்டுக்கு சென்றிருந்த ஒருவர், இந்த ஊர்க்குருவியுடன் பேசினார்.
மாநாட்டில் கலந்துகொண்ட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் ஹிந்தியில் பேசினார்கள்.
நமது போராளிகள் தமிழில் தமது கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள்.
அங்கு மொழிபெயர்ப்பு வசதி எதுவும் இருக்கவில்லை.
இவர்கள் சொன்னது அவர்களுக்கு புரிந்திருக்காது.
அவர்கள் சொன்னதும் இவர்களுக்கு புரிந்திருக்க சந்தர்ப்பம் இருந்திருக்காது என்று.
இவ்வாறான ஒரு மாநாட்டுக்கு செல்கின்றபோது தாங்கள் சொல்கின்ற விடயங்களை குறைந்தது ஆங்கிலத்தில் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவாவது ஒருவரை அழைத்துச் சென்றிருக்கலாம்.
விடுதலைப் புலிகளே ஜோர்ஜ் மாஸ்டரை வைத்திருந்தது போல.
அதுவல்ல நாம் இப்போது சொல்ல வருவது, வெள்ளிக்கிழமை எழுதியிருந்த பந்தியில், இவர்கள் முக்கிய போராளிகள்தானா என்றும் அவர்களை பலரும் அறிந்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
அதுகுறித்த ஒரு போராளி கவலை தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர், இலங்கை அரசாங்கம் பன்னிரண்டாயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் ஒன்றிணைத்ததாக தொடர்ந்து கூறிவருகின்றது.
அந்தப் பன்னிரண்டாயிரம் போராளிகளில் ஏராளமானவர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் கடைசி நேரத்தில் இணைந்து கொண்டவர்கள்.
யுத்தம் முடிவடைந்து, மக்களோடு மக்களாக வெளியேறி செட்டிக்குளம் முகாமில் எல்லோரும் தங்கியிருந்து போது, அங்கு படையினரால் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
‘ஒரு நாளேனும் புலிகள் இயக்கத்தில் இருந்திருந்தால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்த வேண்டும்’, என்ற அவர்களின் அறிவிப்பை அடுத்து அவ்வாறானவர்களை அவர்களின் பெற்றோரே படையினரிடம் கையளித்தனர்.
அவ்வாறு கையளிக்கப்பட்டவர்களில் பலரே பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள்.
அவ்வாறு சரணடைந்த மூத்தபோராளிகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
பசீர் காக்கா, தயா மாஸ்டர் போன்ற முக்கிய போராளிகள் மீது வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர்.
அவ்வாறு இல்லாமல் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் முக்கிய போராளிகள்தானா என்பது தெரியவில்லை.
ஆனாலும், விடுதலைப் புலிகளின் தியாகங்களை தமது சொந்த அரசியலுக்காக சிலர் பயன்படுத்தும்போது, ஒரு நாளேனும் போராளியாக இருந்தவர்கள் புலிகளின் பெயரில் அரசியல் செய்வது தவறானது என்று யாரும் சொல்லிவிட முடியாது என்றார் அந்த நண்பர்.
இந்தியா சென்றதும், இந்தியாவின் துணையுடன்தான் நமது பிரச்சினைகளை தீர்க்கலாம் என்ற நம்பிக்கை அந்த ஆய்வாளருக்கு ஏற்பட்டது போல இவர்களுக்கும் ஏற்பட்டிருந்தால், தாயகம் திரும்பியதும் அவர்கள் செய்யவேண்டியது, நான் முன்னரே வெள்ளிக்கிழமை குறிப்பிட்டதுபோல, அவர்கள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை ஏற்றுக்கொள்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இல்லையேல் அவர்கள் அதிலிருந்து வெளியேறி தமது புதிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாக களம் இறங்கவேண்டும்.!

  • ஊர்க்குருவி

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles