இலங்கையின் உணவுப் பாதுகாப்பு விடயத்தில் ஐ.நா.வின் தலையீடு அத்தியாவசியம் – சஜித்!

0
175

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தோற்றம் பெற்றுள்ள உணவு பாதுகாப்பின்மை நிலையை எதிர்கொள்ளல் மற்றும் வறுமையிலுள்ள மக்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு அத்தியாவசியமானது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா – சிங்கர் ஹம்டி ஆகியோருடன் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்களின் செயற்பாடுகளுக்கு வழிகாட்டும் ‘ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி கூட்டுறவுச் சட்டகம் 2023 – 2027’ ஐ அறிமுகப்படுத்துவது தொடர்பில் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  

ஐக்கிய நாடுகள் சபையுடன் முறையான மற்றும் நேர்மறையான ஈடுபாட்டின் முக்கியத்துவமும் இதன் போது கவனத்தில் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.