இலங்கையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் போது விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, குறைபாடுகளையும், தீர்வுகளையும் கண்டறிய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹன்னா சிங்கர், ட்விட்டர் பதிவொன்றில் இதனைக் கூறியுள்ளார்.
சர்வதேச தரத்துக்கு அமைவாக உள்நாட்டின் சட்டதிட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
சட்ட திருத்தத்தின் ஊடாக சட்ட அமுலாக்கத்தின் வழக்கங்களும் மாற வேண்டும் என்றும் இதற்கான ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகளிடம் இருந்து எப்போதும் கிடைக்கும் என்றும் அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையில் பல சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறித்து விளக்கமளித்திருந்தார்.
இதனை அடுத்தே ஹன்னா சிங்கர் தனது ட்விட்டர் பதிவை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.