இலங்கையை அண்டிய கடற்பகுதியில் தீவிரமாக நோட்டமிடும் இந்தியப் படைகள்!

0
168

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல் நங்கூரமிட்டுள்ள நிலையில், பாக்கு நீரிணை பகுதியில் இந்திய கடற்படையினர் அதிநவீன கப்பல்கள் மற்றும் ரேடார்கள் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில், இந்திய அரசாங்கம் ஆட்சேபனை வெளியிட்டது. இதையடுத்து, கப்பலின் வருகையை பிற்போடுமாறு சீனாவிடம் இலங்கை கோரியது.

இதன்காரணமாக, கடந்த 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய இருந்த கப்பலின் பயணம் தாமதப்படுத்தப்பட்டது. இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இந்தநிலையில், நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த யுவான் வாங் 5 கப்பல், எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் வரை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதால், தென் இந்தியாவில் உள்ள இராணுவ நிலையங்களையும், அணுமின் நிலையங்களையும் அது கண்காணிக்கும் அபாயம் உள்ளதாக தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எனவே, இந்தியா பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளதுடன், முக்கியமாக தமிழக கடலோர பகுதிகளை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. 

இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் பாதுகாப்பு படை காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல்படைக் கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ளதால் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பல் உட்பட 8 கப்பல்கள், 2 விமானங்கள், 3 உலங்கு வானூர்திகள் மூலம் பாதுகாப்பு படை வீரர்கள் இடைவிடாத கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தமிழக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கை கடல் பகுதியில் இருந்து ஏதேனும் சந்தேகத்திற்கிடமான படகுகள் வருகின்றதா? என்றும், ஏதிலிகள் எவரும் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காகவும், கீழக்கரை கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து அதிநவீன ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த ரேடார் கருவி உளவு கப்பலின் செயல்பாடுகளை தொடர்ந்து காண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனக் கப்பல் 750 கிலோமீற்றர் சுற்றளவில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாக கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. ஹம்பாந்தோட்டை பகுதிக்கு அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமாக 6 படைதளங்கள் உள்ளன.

அங்குள்ள தொழில்நுட்பங்கள், போர் விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட தகவல்களை சீனக் கப்பல் சேகரிக்கும் அபாயம் உள்ளதால் சீன உளவு கப்பல் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பரப்பில், உலங்கு வானூர்திகள் தாழ்வாக பறந்து கண்காணிப்பதுடன், இந்திய கடற்படையினர், உலங்கு வானூர்தியில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் வழமைபோல் கடலுக்குச் செல்வதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனக் கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னரே மீனவர்கள் வழமைபோல மீன்பிடிக்க செல்லும் சூழ்நிலை உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.