தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கான அரசியல் கட்டமைப்பு தொடர்பில் சிந்திக்க வேண்டியதும், சிந்திப்பதை நடைமுறைப்படுத்த வேண்டியதும், தமிழ் தேசிய அரசியல் பரப்பிலுள்ளவர்களின் முதன்மையான பணியாகும்.
இது தொடர்பில் எமது முன்னைய ஆசிரியர் தலையங்கங்களிலும் எடுத்துரைத்திருக்கின்றோம்.
ஆனாலும் நிலைமை சீரடையவில்லை – மாறாக மேலும் மோசமடைவதற்கான அறிகுறிகளே தெரிகின்றன.
தமிழ்த் தேசியக் கட்சிகளாக இன்று தங்களை அடையாளப்படுத்தியிருப்பவர்கள் அனைவருமே ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்புக்களை கொண்டிருப்பவர்கள் அல்லர்.
ஒப்பீட்டடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி, வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவட்ட கட்டமைப்புக்களை கொண்டிருக்கின்றது.
ஆனால் அவைகளும் பலமான நிலையில் இல்லை.
இந்த பின்புலத்தில் தான் கூட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
ஆனால் அவ்வாறான கூட்டு வேலைத்திட்டங்களும் இதுவரையில் ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையின் கீழ் முன்னெடுக்கப்படவில்லை.
எதிர்கால அரசியல் நிலைமைகள் எவ்வாறும் மாற்றமடையலாம்.
அது நமது கணிப்பிற்கு அப்பாற்றப்பட்டது.
நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருப்பதற்கு அமைவாக, ஒரு கூட்டு முன்னணிக்கான, ஆனால் அது முறையான கட்சிக்கான பதிவை கொண்டதாக உருவாக்கப்படவேண்டும்.
தற்போதுள்ள நிலையில் வெளியிலிருப்பவர்களையும் உள்வாங்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும்.
இது தொடர்பில் அதிகம் கால தாமதம் கூடாது.
இது ஒரு வழிமுறை.
அடுத்தது, ஒரு வேளை அது சரிவராவிட்டால், நீண்டகால நோக்கில் சமஸ்டிக் கோரிக்கையுடனும், இடைக்கால அடிப்படையில் மாகாண சபையை உச்சளவில் பயன்படுத்துவது, பலப்படுத்துவது என்னுமடிப்படையில் இணங்கிச் செல்லக்கூடிய அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைக்கும் பொறிமுறையொன்று தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
வெறும் தேர்தல் அரசியல் கணக்குப் போடுவதன் மூலம் எதிர்கால அரசியலை கையாள முடியாது.
இன்றைய நிலையில் இலங்கைத் தீவில் மிகவும் பலவீனமான அரசியல் கட்டமைப்பை கொண்டிருப்பவர்கள் தமிழ் மக்கள் மட்டும்தான்.
இதற்கு அனைவருமே பொறுப்பாளிகளாவர்.
ஆரம்பத்திலிருந்தே கூட்டமைப்பு ஒரு பலவீனமான அமைப்பாகவே இருந்து வருகின்றது மற்றும் உள் முரண்பாடுகளின் கூடாரமாகவே இருந்து வருகின்றது.
சின்னம் ஒரு கட்சியிடமும், ஏனையவர்கள் தேர்தல் காலத்தில் ஆசனங்களுக்காக தமிழரசு கட்சியிடம் சண்டை போடும் நிலையிலேயே கடந்த ஒரு தசாப்த கால அரசியல் முன்னெடுப்புக்கள் நகர்ந்திருக்கின்றன.
சின்னம் தங்களுடையது என்னுமடிப்படையிலேயே தமிழரசுக் கட்சி அனைத்து விடயங்களிலும் மேலாதிக்கம் செலுத்தியது.
இதுவே பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுத்தது.
இறுதியில் தனிநபர்கள் தங்களின் விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியது.
கூட்டு முடிவுகளின் அடிப்படையில் அரசியலை முன்னெடுக்கும் பொறி முறையொன்றே எதிர்காலத்திற்கு தேவையானது.
ஆனால் தற்போதுள்ள கூட்டமைப்பிலும் அதே வேளை, கூட்டமைப்பை தவறென்று கூறி மாற்று அரசியலை முன்னெடுக்க முற்பட்டவர்கள் எவரிடமும் அவ்வாறான அரசியல் கட்டமைப்பொன்று இல்லை.
தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும் புத்திஜீவிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் அனைவரும் இது தொடர்பில் சிந்திக்க முன்வர வேண்டும்.
அனைவரும் ஒன்றுபட்டு, எதிர்கால அரசியலுக்கான ஒரு பொருத்தமான, உறுதியான அத்துடன், தனிநபர்கள் தங்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப கையாள முடியாத, அரசியல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலம் கேள்விக்குள்ளாவது நிச்சயம்.
வெறும் தேர்தல் காலத்தில், வாக்குகளை சேகரிப்பதற்காக ஆட்களை தேடும் அரசியலாகவே – தமிழ் தேசிய அரசியல் சுருங்கிப்போகும்.
தேர்தலில் எவர் அதிகம் முதலீடு செய்வாரோ அவர்களே தலைவர்களாகும் அவலம் நிகழும்.