கட்சியின் அனுமதியுமின்றி சிலர் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றனர் – மைத்ரிபால சிறிசேன

0
133

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் எவ்வித அனுமதியுமின்றி இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ளதாக, அதன் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இடைக்கால அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்படுமானால் மாத்திரமே, அரசாங்கத்துக்கு ஆதரவளித்து, பதவிகளை ஏற்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்ததாக கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அந்தத் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டு, அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதை அனுமதிக்க முடியாது.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட இலாபத்தை அடிப்படையாகக்கொண்டு இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றமை குறித்து தாம் வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.