கிரிக்கட் வீரர்களை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது

0
74

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் நாட்டுக்காகவும், தமது அணிக்காகவும் பொறுப்புணர்வுடன் செயற்படும் அதே வேளை, ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும். அதே வேளை அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் அனுமதிக்க முடியாது. அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதன் மூலமே முன்னோக்கிச் செல்ல முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

விளையாட்டில் தோல்வியடைந்தமைக்காக எமது கிரிக்கட் அணியினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பொறுப்பு கூற வேண்டிய அமைச்சர் என்ற ரீதியில் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று   இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கிரிக்கட் விளையாட்டு வீரர்கள் அதனை வெறும் விளையாட்டாக அன்றி, தொழிலாகவும் மதிக்க வேண்டும். அவர்களது செயற்திறன் மாத்திரம் சிறப்பாக இருந்தால் போதாது. ஒழுக்கமும் பேணப்பட வேண்டும். அதே வேளை எமது அணி வீரர்களை கொச்சைப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவதையோ, பொது வெளிகளில் பேசுவதையோ அங்கீகரிக்க முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.