அமெரிக்க ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்கான மிகச்சிறந்த நம்பிக்கை கமலா ஹாரிஸ் என ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனநாயக கட்சியின் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ‘நன்றி ஜோ’ என்ற கோசங்களிற்கு இடையில் ஜோ பைடன் தனது மகள் ஜோ ஆஸ்லேயுடன் மேடையில்
தோன்றினார்.
தனது மகள் தன்னை அறிமுகப்படுத்திய பின்னர், கண்ணீருடன் உரையாற்றிய பைடன், ‘நீங்கள் சுதந்திரத்திற்காக வாக்களிக்க தயாரா? அமெரிக்காவிற்கும் ஜனநாயக கட்சிக்கும் வாக்களிக்க தயாரா? கமலா ஹரிசையும் டிம் வோல்சினையும் தெரிவு செய்ய தயாரா’ என கேள்வி எழுப்பினார். டொனால்ட் டிரம்பினை பலமுறை தாக்கிய பைடன் கமலா ஹரிசிற்கான மிகச்சிறந்த தொண்டனாக விளங்குவேன்
என்றும் சுட்டிக்காட்டினார்.
‘நான் ஜனாதிபதி பதவியை நேசிக்கின்றேன் ஆனால் அதனை விட அமெரிக்காவை நேசிக்கின்றேன்’ என ஜோ பைடன் தெரிவித்தவேளை மாநாட்டில் திரண்டிருந்தவர்கள் ‘நாங்கள் ஜோவை நேசிக்கின்றோம்’ என கோசம் எழுப்பினர். அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தியது,சர்வதேச ரீதியில் அதன் நட்புறவை வலுப்படுத்தியது போன்ற தனது அரசாங்கத்தின் சாதனைகளை பட்டியலிட்;ட பைடன் தனக்கு பின்னர் வெள்ளை மாளிகைக்கு கமலா ஹாரிசினை தெரிவு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்காவிற்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிறவெறி வெள்ளை மேலாதிக்கம் போன்றவற்றை சாடிய ஜோ பைடன் அவற்றிற்கு அமெரிக்காவில் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.