25 C
Colombo
Sunday, November 24, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி அனுர குமாரவும் எதிரணியும்!

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு எந்தத் தேவையும் இல்லை. அரசியல் எதிரணி ஒழிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களின் பொறுப்பு. இன்று நாட்டுக்கு தேவைப்படுவது பலம் பொருந்திய அரசாங்கம் ஒன்றே தவிர, எதிர்க்கட்சி அல்ல. அதனால் அடுத்த பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் மக்கள் நிரப்பவேண்டும். ‘ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் விளைவாக முன்னைய பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்களில் சுமார் 60 அரசியல்வாதிகள் வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்த காரணங்களுக்காக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டார்கள்.

எஞ்சியிருக்கும் ஊழல்வாதிகளையும் எதிரணி அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் புதியவர்களையும் தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் பாராளுமன்றத்தை துப்புரவாக்கும் பணியை வாக்காளர்கள் நிறைவு செய்ய வேண்டும்.’ இலங்கையில் கூடுதலான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்ட மாவட்டங்களில் ஒன்றான கம்பஹாவில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை தொடக்கி வைத்து கடந்த ஞாயிறன்று கட்டுநாயக்காவில் பேரணி ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவும் அவரின் வலதுகை அமைச்சர் விஜித ஹேரத்தும் தெரிவித்தனரென கொழும்பு பத்திரிகைகளில் வெளியான கருத்துகள் இவை.

தங்களின் உரைகளை மக்களை தவறாக வழி நடத்தும் நோக்கில் அந்தப் பத்திரிகைகள் திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டன என்று இந்த ஆசிரிய தலையங்கத்தை எழுதிக்கொண்டிருந்த தருணம் வரை அவர்கள் இருவரிடமும் இருந்து எந்த மறுப்பும் வந்ததாக இல்லை. புதிய ஜனாதிபதியாக திசநாயக்கவை தெரிவு செய்ததன் மூலம் மக்கள் பாரம்பரியமான ‘பிரதான’ அரசியல் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் நிராகரித்திருப்பதுடன் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு தலைவராக அவர் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்கள். பழைய கட்சிகளின் இதுகாலவரையான தவறான ஆட்சி முறையையும் ஊழல் முறைகேடுகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் இனிமேலும் பொறுத்துக்கொள்ளத் தயாரில்லை என்பதை உலகுக்கு மக்கள் தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நிராகரித்த கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

ஆனால், மக்கள் முன்னிலையில் உருப்படியான கொள்கைகளையோ, வேலைத் திட்டங்களையோ அவை முன்வைக்கவில்லை. மக்களிடம் எதைக் கூறுவது என்று தெரியாமல் அவை தடுமாறுகின்றன. புதிய அரசாங்கத்தின் மீது தவறு கண்டுபிடிக்க அவை ‘முட்டையில்…… பிடுங்குகின்றன.’ அவற்றை எவ்வாறு கையாளுவது என்பது மக்களைப் பொறுத்த விடயம். ஊழல்தனமான அரசியல் கலாசாரத்தை கட்டி வளர்த்தவர்களை ஜனநாயக தேர்தல் செயன்முறைகளின் மூலமாக நிராகரிப்பதற்கு முன்னதாக வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்வதன் மூலமாகவும் அதிகாரத்தில் இருந்து தங்களால் விரட்ட முடியும் என்று நிரூபித்தவர்கள் இலங்கை மக்கள். அதேவேளை இரு வருடங்களுக்கு முன்னர் இலங்கை வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையிலான கிளர்ச்சிக்கு பிறகு தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு கிடைத்த முதல் வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னென்றும் இல்லாத வகையிலான அமைதியான தேர்தலில் சுமுகமான அதிகார மாற்றத்தையும் உறுதி செய்தவர்கள் அவர்கள்.

இதேவேளை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மூன்று தசாப்த கால இடைவெளியில் இரு ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து தோல்வி கண்ட ஜனதா விமுக்தி பெரமுனவின்( ஜே. வி. பி.) வன்முறை கடந்த காலத்துக்கு அதை நெடுகவும் பணயக் கைதியாக வைத்திருக்காமல் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை மக்கள் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். நம்பகத்தன்மையான ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக தேசிய மக்கள் சக்தியை நோக்கியதன் விளைவாகவே இன்று அதன் தலைவரான திசநாயக்கவை மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக்கி இருக்கிறார்கள்.

பலம் பொருந்திய அரசாங்கம் ஒன்று மாத்திரமே இன்றைய தேவை என்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு எந்தத் தேவையும் இல்லை எனவும் ஜனாதி பதியினதும் அமைச்சர் ஹேரத்தினதும் கருத்துகள் ஜனநாயக அரசியல் மீதான அவர்களின் பற்றுறுதி மீது மக்களுக்கு நிச்சயம் சந்தேகத்தை ஏற்படுத்தும். பாராளுமன்றத்தை துப்புரவு செய்வது என்பது பழைய ஊழல்தனமான அரசியல் வர்க்கத்தவர்களை ஜனநாயக ரீதியாக தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவது என்று மாத்திரம் அமைய வேண்டுமே தவிர, பாராளுமன்றத்தில் எதிரணியே இருக்கத் தேவையில்லை என்று ஒருபோதும் ஆகிவிடாது. ஊழலற்ற அரசாங்க நிருவாகத்தை உறுதிசெய்வதற்கு பாராளுமன்றத்துக்கு புதியவர்களை தெரிவு செய்வதைப் போன்று அரசாங்கத்தின் தவறுகளையும் இடம்பெறக்கூடிய அதிகார மீறல்களையும் தட்டிக் கேட்க புதியவர்களைக் கொண்ட எதிரணியும் வேண்டும். அதுவும் இன்று நாட்டுக்கு அவசியமாக தேவைப்படுகிறது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles