ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சந்திதிப்பு!

0
175

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், இன்று, விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு, கொழும்பில், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணிக்கியன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையிலேயே, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நலன்சார்ந்த, 10 முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இதன் போது கருத்து வெளியிட்ட சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி தெரிவின் போது, கூட்டமைப்பினர், டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களித்தமையை சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும், அதனை பொருட்படுத்தாமல், தங்களது கோரிக்கையை நிறைவேற்ற உள்ளமையை வரவேற்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தனக்கு ஆதரவாக வாக்களித்ததாக குறிப்பிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில், கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், மௌனம் காத்திருந்தனர்.
அத்துடன், ஜனாதிபதியின் தேசிய வேலைத் திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என, கூட்டமைப்பினர், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

  1. நீண்ட காலமாக சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினரை, மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்வது.
  2. அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன், கணக்காளர் ஒருவரையும் நியமித்தல்.
  3. வடக்கு, கிழக்கில், தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளிலும், பொதுப் பயன்பாட்டுக்குரிய அரச காணிகளிலும், அடாத்தாக முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்கு, அக்காணிகளை நிரந்தரமாக வழங்கும் முகமாக, நில அளவைத் திணக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்துதல்.
  4. தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வன வளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனிய வளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துதல்.
  5. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிப்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவுதல்.
  6. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலை நிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்தல்.
  7. வடக்கு, கிழக்கிலுள்ள தனியார் காணிகளில் இருந்து படையினரை வெளியேற்றி, தமது சொந்த நாட்டில், இன்னும் அகதிகளாக உள்ள எமது மக்கள், தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்தல்.
  8. கடந்த எண்பது வருடங்களுக்கு மேலாக, இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதம் அமற்ற உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்.’
    உள்ளிட்ட கோரிக்கைகள், ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன.