தமிழ்த் தேசிய கட்சிகளின் பின்னடைவு?

0
105

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி எட்டு ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. இதனால், தாங்களே தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரேயொரு கட்சி என்று அவர்களால் சொல்ல முடியும். ஆனால் இதனை அவர்கள் ஒரு வெற்றியாகக் கூறிக்கொள்ள முடியுமா?

2010இல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எத்தனை ஆசனங்கள் இருந்தன – அவை ஏன் தொடர்ந்தும் குறைந்து கொண்டே செல்கின்றன? இந்தப் பின்புலத்தில் நோக்கினால் ஒப்பீட்டடிப்படையில் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றிபெற்றதாக கூறிக்கொண்டாலும் கூட, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்தல் என்னும் நிலையில் கட்சி தோல்வியுற்றிருக்கின்றது. குறிப்பாக வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் அலைக்குள் தமிழ் மக்கள் அள்ளுண்டு போயிருக்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் அலைக்கு முன்னால் தமிழ்த் தேசியத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றால், தமிழ்த் தேசிய நிலையில் வடக்கு மிகவும் மோசமான நிலையில்தானே இருக்கின்றது. இது வெறுமனே, வடக்கு மைய தமிழ்த் தேசியர்களின் தோல்வி மட்டுமல்ல, அதன் மீது செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் புலம்பெயர் அமைப்புக்களின் தோல்வியும்தான். தேசிய மக்கள் சக்தியின் முன்னால் தமிழ்த் தேசியர்கள் அனைவருமே தோல்வியுற்றிருக்கின்றனர். அடுத்ததாக தங்களை ஜந்து கட்சிகளின் கூட்டணியாக முன்னிறுத்தியிருந்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றது.

ஜந்து கட்சிகள் – அதிலும் கட்சிகளின் தலைவர்களும் போட்டியிட்ட போதிலும் கூட, அனைவருமாக வடக்கில், ஓர் ஆசனத்தைக் கூட பெற முடியவில்லை என்றால் அவர்கள் தங்களை தொடர்ந்தும் ஒரு கூட்டணி என்று சொல்லிக்கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை. கட்சிகள் பிரிந்து கேட்டதால்தான் இவ்வாறானதொரு பின்னடைவு ஏற்பட்டது என்று வழமைபோல் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை – கட்சிகள் ஒன்றுபடாது – ஒன்றுபட அதிக வாய்ப்பில்லை என்னும் போது, அதனை முன்வைத்து தப்பிப்பிழைக்கும் வாதங்களை புரிய முற்படுவது தவறானது.

அடிப்படையான விடயம் ஒன்றுதான் – அதாவது, புதிய அரசியல் சூழலை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறான அணுகுமுறைகளுக்கு கட்சிகள் தயாரற்ற நிலையில் இருப்பதே அடிப்படையான பிரச்னையாகும். சில கட்சிகள், சில கட்சிகளின் தலைவர்கள் என்போர் முதலில் தங்களின் தகுதிநிலையை ஆராய வேண்டும். தாங்கள் தொடர்ந்தும் தேர்தல் அரசியலில் இருப்பது அரசியல் நியாயமுடையதா என்பதைப் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். இதுதான் முதலில் செய்யப்பட வேண்டியது. ஜனநாயக அரசியலில் மக்கள் பிரதிநிதித்துவம்தான் அடிப்படையானது. அதனை இழந்துவிட்டால் அதன் பின்னர் என்ன நியாயத்தையும் கூறியும் பயனில்லை.

தற்போதைய நிலையில் தமிழரசு கட்சியே தமிழ்மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது. அவ்வாறு வாதிட்டால், அது ஜனநாயகரீதியில் சரியானதே. இந்த இடத்தில் அரசியல்வாதிகள் மீது மட்டும் குற்றஞ்சாட்டிவிட்டு, விடயங்களை சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாது. ஏனெனில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சிதைத்தவர்கள் அரசியல்வாதிகள் அல்லர் மாறாக, தங்களை புத்திஜீவிகள், கருத்துருவாக்கவாதிகள் மற்றும் சிவில் சமூக அமையமாக, அடையாளப்படு;த்தியவர்களே அதன் சிதைவில் பெரியளவில் பங்களித்திருந்தனர். தற்போதைய சீரழிவுக்கு அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். ஒரு சில தனிநபர்கள் மீது பழியை போட்டுவிட்டு ஏனையவர்கள் தப்பியோடலாம் என்று நினைத்தால், இந்த நிலைமை மேலும் சீரழிவை நோக்கியே செல்லும்.