தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்

0
66

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அரசாங்கம் அறிவிக்கும் சம்பளத்தை வழங்க முடியாதென கூறுவோரின் காணிகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படும் எனவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
‘மக்களுக்கு பண்டிகைகளைக் கொண்டாட மன நிம்மதி இல்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வெசாக், பொசன் பண்டிகைகளை மாத்திரமன்றி நத்தார் பண்டிகையையும் கொண்டாடுவதற்குத் தேவையான சூழலை உருவாக்கியுள்ளது. அதனால் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் கடந்த வருடத்துடன் தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள் என்றே சொல்வேன். மக்கள் இழந்திருந்த மன நிம்மதி மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை சாடும் எவரிடத்திலும் சரியான பொருளாதாரத் திட்டமொன்று இல்லை. அப்படியொரு வேலைத்திட்டம் இருந்தால் முன்வையுங்கள், நாங்கள் சொன்னதை செய்துக்காட்டிக் கொண்டிருக்கிறோம். அஸ்வசும, உறுமய உள்ளிட்ட திட்டங்கள் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருந்தாலும் இதற்கு முன்னர் அவர் ஜனாதிபதியாக இருந்ததில்லை. அவர் முதல் முறையாக பதவியேற்றதில் இருந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். 25சதவீதம் ஆகக் காணப்பட்ட வங்கி வட்டி இன்று 12சதவீதம் – 8 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.
மேலும், ஊழல் தடுப்புச் சட்டம், தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டம், சொத்துப் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலம் மற்றும் பொது அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பி ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.’கருசரு’ வேலைத்திட்டத்திற்கு இணையாக செயற்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்துக்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

அரசாங்கம் அறிவிக்கும் சம்பளத்தை வழங்க முடியாதென கூறுவோரின் காணிகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படும். பின்னர் அந்த தோட்டங்கள் நீண்ட கால குத்தகை அடிப்படையில் அவற்றை முறையாக நிர்வகிக்கக்கூடிய தரப்பினருக்கு வழங்கப்படும். அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதியையும் ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளார்.’