நாம் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கின்றோமா? – இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்

0
82

இலங்கை ஓர் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையும் அதன் மக்களாகிய நாமும் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கின்றோமா? என்று கேள்வி எழுப்பியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், நாட்டின் உண்மையான சுதந்திரத்தை சீர்குலைக்கின்ற தவறான எண்ணங்கள், அச்சங்கள், ஒடுக்குமுறைகள், ஊழல் மற்றும் அடிமைத்தனம் என்பவற்றிலிருந்து இலங்கை விடுதலையடையும் அந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள எல்பின்ஸ்ட் அரங்குக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப்போராட்டத்தின்மீது நேற்று (03) நள்ளிரவு பொலிஸாரால் நீர்த்தாரைப்பிரயோகம் நடாத்தப்பட்டதுடன் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டனர்.

 நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

அவ்வாறிருக்கையில் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளுக்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தும், முறையற்ற நிர்வாகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுமே இந்த சத்தியாக்கிரகப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வேளையில் அவ்விடத்திற்கு வருகைதந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், சத்தியாக்கிரகப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை அங்கிருந்து கலைக்க முற்பட்டனர். இதன்போது அங்கிருந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

குறிப்பாக அந்த சத்தியாக்கிரகப்போராட்டத்தைக் கலைப்பதற்கான நீதிமன்ற உத்தரவு தம்மிடம் இருப்பதாகப் பொலிஸார் கூறியபோதிலும், அங்கிருந்த சட்டத்தரணிகள் அந்த நீதிமன்ற உத்தரவை சரியாக வாசித்துப்பார்க்குமாறும், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுமாறும் பொலிஸாரிடம் வலியுறுத்தினர்.

அதனைத்தொடர்ந்து அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப்போராட்டத்தின்மீது நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார், போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் 4 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

‘கண்டிய பிரகடனத்தில் கையெழுத்திடப்பட்டு 133 வருடங்களின் பின்னர், 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை ஓர் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு அறிவிக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையும் அதன் மக்களாகிய நாமும் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கின்றோமா?

 இலங்கையின் உண்மையான சுதந்திரத்தை சீர்குலைக்கின்ற மற்றும் மக்களின் மனித மாண்பைப் பறிக்கின்ற தவறான எண்ணங்கள், அச்சங்கள், ஒடுக்குமுறைகள், ஊழல் மற்றும் அடிமைத்தனம் என்பவற்றிலிருந்து இலங்கை விடுதலையடையும் அந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.