தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடனான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பணிச்சுமையை கருத்திற்கொண்டு 4 வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை நியூசிலாந்துடனான 3ஆவது ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு வழங்கியுள்ளது.
அதன்படி, பெத்தும் நிசங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகிய நான்கு முக்கிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் விடுவித்துள்ளது. 27ஆம் திகதி ஆரம்பமாகும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் சவால்களுக்கு தயாராகவும் ஓய்வெடுக்கவும் குறித்த வீரர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக நுவனிந்து பெர்னாண்டோ, லஹிரு உதார, மற்றும் எஷான் மலிங்க ஆகிய வீரர்கள் இலங்கை ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.