சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சுதந்திரமாக செயற்படவிடுமாறு வலியுறுத்தி, முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட தரப்புகள் மீது அரச புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளினாலும் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது


வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினுடைய ஏற்பாட்டில், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மாவட்டத்தில் பணியாற்றி வருகின்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பல்வேறு தரப்பினர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில் இது தொடர்பில் இறுக்கமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், ‘பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, எமது நிலம் எமக்கு வேண்டும், நடமாடும் சுதந்திரம் எங்கள் உரிமை, வடக்கு மற்றும் கிழக்கில் மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், மனித உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்து, கருத்து சுதந்திரம் எங்கள் உரிமை, சிவில் சமூக அமைப்பினரை விரட்டாதே, உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.