28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொட்ஸ்வானாவில் பெற்ற அனுபவங்களுடன் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி

தென் ஆபிரிக்காவில் இன்று வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமாகும் 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சிறந்த பெறுபெறுகளை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை களம் இறங்கவுள்ளது. 

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் உலக தரவரிசையில் 4ஆம் இடத்திலுள்ள ஜெமெய்க்காவை இன்று மாலை எதிர்த்தாடவுள்ளது. 

உலகக் கிண்ண வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்புக்கு முன்னோடியாக பொட்ஸ்வானாவில் நான்கு பயிற்சிப் போட்டிகளில் விளையாடிய இலங்கை வலைபந்தாட்ட அணி அவற்றில் 2 வெற்றிகளை ஈட்டியதுடன் 2 தோல்விகளை சந்தித்தது. 

இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத் தலைவி விக்டோரியா லக்ஷ்மியின் முயற்சியால் இலங்கை வலைபந்தாட்ட அணியினருக்கு பொட்ஸ்வானாவில் பயிற்சிப் போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தது. 

உலக தரவரிசையில் 24ஆம் இடத்தில் உள்ள பொட்ஸ்வானா தேசிய அணியுடனான முதலாவது பயிற்சிப் போட்டியில் உலக தரவரிசையில் 15ஆம் இடத்திலுள்ள இலங்கை 51 – 70 (12 – 19, 16 – 13, 13 – 15, 10 – 23) என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வி அடைந்தது. 

அதனைத் தொடர்ந்து சில தேசிய வீராங்கனைகளைக் கொண்ட பொட்ஸ்வானா பொலிஸ் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 70 – 36 (16 – 9, 17 – 14, 17 – 7, 20 – 6) என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றிபெற்றது. 

BDF Cats அணியுடனான 3ஆவது போட்டியில் கடும் சவாலுக்கு மத்தியில் இலங்கை 55 – 53 (14 – 16 16 – 12 , 9 – 12, 16 – 13) என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

பொட்ஸ்வானா தேசிய அணியுடனான கடைசிப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை 54 – 58 (15 – 13, 10 – 16, 13 – 15, 16 – 14) என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்தது. 

இந்த நான்கு போட்டிகளிலும் இலங்கை வீராங்கனைகள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து ஒவ்வொருவரினதும் ஆற்றலைப் பரீட்சித்ததாக தலைமைப் பயிற்றுநர் திலக்கா ஜினதாச தெரிவித்துள்ளார். 

‘இந்தப் போட்டிகள் மூலம் இலங்கை வீராங்கனைகள் சிறந்த போட்டி அனுபவங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். எனவே உலகக் கிண்ணப் போட்டியில் பலம்வாய்ந்த அணிகளை எதிர்கொள்ளும் துணிச்சல் வீராங்கனைகளுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் கடந்த கால உலகக் கிண்ணப் போட்டிகளைவிட இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் திறமையாக விளையாடுவார்கள் என நம்புகின்றேன்’ என்றார். 

இது இவ்வாறிருக்க, ‘தென் ஆபிரிக்காவில் தனது அணி மிகத் திறமையாக விளையாடி முன்னைரைவிட சிறந்த பெபேறுகளைப் பெறும் என நம்புகின்றேன். வீராங்கனைகள் அனைவரும் சிறந்த மனோநிலையுடனும் உடற்தகுதியுடனும் இருக்கிறார்கள். எமது குழுவில் இடம்பெறும் 3 அணிகளும் எம்மைவிட உலக தரவரிசையில் முன்னிலையில் இருக்கின்றபோதிலும் எங்களால் திருப்பங்களை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்’ என அணித் தலைவியும் மத்திய கள வீராங்கனையுமான கயஞ்சலி தெரிவித்தார். 

இலங்கை அணி:

கயஞ்சலி அமரவன்ச (தலைவி), துலங்கி வன்னிதிலக்க (உதவித் தலைவி), செமினி அல்விஸ், கயனி திசாநாயக்க, சத்தரங்கி ஜயசூரிய, திசலா அல்கம, மல்மி ஹெட்டிஆராச்சி, பாஷினி யோஷிதா டி சில்வா, ஷானிக்கா பெரேரா.

பயிற்றுநர்: திலகா ஜினதாச, உதவிப் பயிற்றுநர்: பி. டி. ப்ரசாதி.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles