அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது இந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை எனவும், தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் முறையாக நீக்கப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ள வெளிநாட்டு கையிருப்பினை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘பல்வேறு காரணிகளினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மீட்சிக்காக மத்திய வங்கி கொள்கை திட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து அவற்றை செயற்படுத்தியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு கையிப்பை கொண்டு எரிபொருள், மருந்து பொருட்கள், எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதா அல்லது டெலிபோன், நவநாகரிக பொருட்களை இறக்குமதி செய்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும். நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு கையிருப்பு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்கள் மீது தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதால் எவரது தொழிற்துறையும் பாதிக்கப்படாது. நிதி நெருக்கடிக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு கையிருப்பை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் முறையாகவும், வினைத்திறனாகவும் பயன்படுத்த மத்திய வங்கி 300 இற்கும் அதிகமான பல்வேறு பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம். டொலர் உள்வருகை தற்போது அதிகரித்துள்ளமை சாதகமானதொரு அம்சமாகும். 300 பொருட்கள் மீதான தடையினை வெகுவிரைவில் நீக்க எதிர்பார்த்துள்ளோம்’ என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.