நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில், நாவலப்பிட்டி வரகாவ ரயில் கேட் மூடப்பட்டிருந்த நிலையில், தனியார் பேருந்தை ஒரு சிறிய இடத்தின் வழியாக பொறுப்பற்ற முறையில் செலுத்திய குற்றச்சாட்டில், தனியார் பேருந்து சாரதி ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கினிகத்ஹேன – லக்ஷபான பகுதியிலிருந்து கடந்த 17 ஆம் திகதி கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து, வரகாவ ரயில்வே கேட் அருகில் வரும்போது கண்டியில் இருந்து நாவலப்பிட்டிக்கு வந்த ரயிலுக்காக பாதுகாப்பு கேட் மூடப்பட்டிருந்துள்ளது.
ரயில் கேட் திறக்கப்படும் வரை, சில முச்சக்கர வண்டிகள் பேருந்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தனியார் பேருந்தின் சாரதி, ரயில் கேட் உள்ள ஒரு சிறிய இடத்தின் வழியாக பேருந்தை செலுத்தி சில நிமிடங்களில் ரயிலும் குறித்த இடத்தை கடந்துள்ளது.
இந்த சம்பவம் அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு கேட் காவலரால் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாவலப்பிட்டி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.