போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்

0
170

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்திலிருந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தல் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள புதிய வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய அமைப்பினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனநள மருத்துவ ஆலோசகர்
வைத்திய கலாநிதி கதம்பநாதன்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உளநள வைத்திய அதிகாரி தயான் சௌந்தரராஜா, மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்ன, விசேட அதிரடிப்படையின் அத்தியட்சகர் மாலக ஜயசேகர, மற்றும் பிரதேச செயலாளர்கள், போதைப்பொருள் பாவனை தடுப்பு செயலணியின் அலுவலர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய அமைப்பின் வைத்தியர் நவநீதனுக்கு, மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு செயலணியினால் கிராம மற்றும் பாடசாலை மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களின் தற்கால மனோ நிலை குறித்தும் தெளிவு படுத்தப்பட்டது.

போதைப் பொருள் பாவனையிலிருந்து தடுப்பதாகவும், புதிய வினைத்திறனான அணுகுமுறைகளுடன், மாணவ சமுதாயத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கான ஒத்துழைப்பை தாம் வழங்கவுள்ளதாக வைத்தியர் நவநீதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.