30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாற்றம் என்ற மாயை?

தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) இலங்கையின் தேசிய இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் எதிர்த்த ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. பண்டா – செல்வா ஒப்பந்தமும் டட்லி – செல்வா ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்ட வேளைகளில் ஜே.வி. பி. தோன்றியிருக்கவில்லை.

ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் 1981 ஆம் ஆண்டில் கொண்டுவந்த மாவட்ட அபிவிருத்தி சபை தொடக்கம் இந்தியாவின் தலையீட்டையடுத்து அதே ஜெயவர்த்தன அரசாங்கம் 1987 ஆம் ஆண்டில் கொண்டுவந்த மாகாணசபை வரை சகல தீர்வு முயற்சிகளையும் ஜே.வி.பி. எதிர்த்தது. அதன் அரசியல் அகராதியில் அதிகாரப் பரவலாக்கலுக்கு இடமிருந்ததில்லை. ஆனால், கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசநாயக்க வெற்றிபெற்று பதவிக்கு வந்த பிறகு இனப்பிரச்னை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜே வி.பி.யின் நிலைப்பாட்டில் ஓரளவுக்கேனும் நெகிழ்ச்சித் தன்மை ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ‘இல்லை, இல்லை.

எங்களிடம் அது விடயத்தில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்காதீர்கள்’ என்று சொல்வதைப் போன்று ஜே.வி.பி. யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இவ்வார முற்பகுதியில் தனியார் தொலைக்காட்சி சேவையொன்றில் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கருத்துக்களை வெளியிட்டார். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு தேவையில்லை.

தமிழ் அரசியல்வாதிகள்தான் தங்களது அதிகாரத்தை தக்கவைப்பதற்கு அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார். ஜனாதிபதி திசாநாயக்கவை பதவிக்கு கொண்டு வந்ததன் மூலம் தென்னிலங்கை மக்கள் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படும் மாற்றத்தில் தங்களது அபிலாசைகளுக்கு எந்தளவுக்கு இடமளிக்கப்படும் என்பதில் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே இருந்து வருகின்ற ஐயுறவை வலுப்படுத்தும் வகையில் ரில்வின் சில்வாவின் கருத்துகள் அமைந்திருக்கின்றன.

ஊழல்வாதிகளையும் இனவாதிகளையும் அரசியலில் இருந்து ஒதுங்கவைப்பதில் தாங்கள் வெற்றி கண்டிருப்பதாக ஜே.வி. பி.யின் பல தலைவர்கள் அண்மைய நாட்களில் கூறினார்கள். இனவாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்கினால் மாத்திரம் போதாது. அந்த இனவாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் விதைத்த தவறான சிந்தனைகளும் இல்லாமல் போனால்தான் ஜே.வி.பி. தலைவர்கள் உரிமை கோருகின்ற வெற்றியில் அர்த்தமிருக்க முடியும்.

ஆனால், தமிழ் மக்கள் 13ஆவது திருத்தத்தை கேட்கவில்லை என்பதும் தமிழ் அரசியல்வாதிகளே அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் ரில்வின் சில்வா புதிதாகக் கண்டுபிடித்த ஒன்றல்ல. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளில் குறைந்த பட்சமானவற்றைக்கூட ஏற்றுக்கொள்ளாத சிங்கள இனவாதிகள் நீண்டகாலமாக செய்துவரும் ஒரு பிரசாரம்தான். மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் தோற்று விக்கப்போவதாக சூளுரைத்து ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியும் அதே இனவாதிகளின் கருத்துக்களிலேயே ஆழக்காலூன்றி நிற்பதாக இருந்தால் மாற்றம் என்பது உண்மையில் ஒரு மாயையே தவிர வேறு ஒன்றுமில்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles