கினிகத்தேனை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகில் நேற்று பாடசாலை மாணவர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கினிகத்தேனை கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவர்களாவர்.
முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற மாணவன், வானை முந்திச் செல்ல முற்பட்டதுடன், எதிர்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதுண்டதில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டியின் பயணிகள் இருக்கையில் பயணித்த மூன்று மாணவர்கள் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததால் பிரதான வீதியில் தூக்கி வீசப்பட்டனர்.
பிரதான சாலையில் வீசப்பட்ட மூன்று மாணவர்கள் மீது மோதுவதைத் தடுக்க, எதிர்திசையில் இயக்கப்பட்ட தனியார் பஸ், அரசு கட்டிடத்தின் சுவர் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் பஸ்ஸில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.