முன்னேற்றங்களை காட்ட முடியாத நிலைமை?

0
360

ஓர் ஆசன – ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்ன ரும்கூட, நிலைமைகளில் பெரியளவில் முன்னேற்றங்களை காண்பிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. விடயங்கள், ஆரம்பத்தில் ஓரளவு சாதகமாகத் தெரிந்தாலும்கூட, தற்போது மீளவும் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான, நீண்ட வரிசையும் பொருள் தட்டுப்பாடும் அதிகரித் திருக்கின்றன. மீண்டும் ஒரு பதற்றமான
சூழலே காணப்படுகின்றது. எவர் கதிரையில் இருந்தாலும்கூட, மாய ஜாலங்கள் மூலம், அதிசய மாற்றங்களை காண்பிக்க முடியாது.
இது தொடர்பில் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். நிலை மைகள் விரைவாக சரிசெய்யக் கூடிய கட்டத்தில் நாட்டின் பொருளாதார நிலைமையில்லை. கடன்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு நாட்டில் எவர் பதவிலிருந்தாலும் இதுதான் நிலைமை. ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிப்பவர்களிடம் நாட்டை ஒப்படைத்தாலும்கூட, அவர்களாலும் உடனடியாக எதனையும் செய்துவிட முடியாது.
அவர்களும் சர்வதேச நாணய நிதியத்திடமும் இந்தியா மற்றும் சீனாவிடமும்தான் செல்வார்கள். இப்போது ரணில் எதனை செய் கின்றாரோ அதனைத்தான் அவர்களும் செய்ய வேண்டும். வேறு எந்த வொரு தெரிவும் இல்லை. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக் கும் சர்வதேச அறிமுகம் குறிப்பாக, மேற்குலக தொடர்புகளும், கொஞ்சம் அதிகமாக கைகொடுக்கக் கூடியதென்னும் அபிப்பிராயம் பலரிடமிருந்தது. அது தவறான பார்வையல்ல.
அந்த அடிப்படையில் மட்டும்தான் ரணில் பொருத்தமானவராகத் தெரிந்தார். ஆனால், ரணிலால் ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியுமா என்னும் கேள்வியிருக்கின்றது. ஏனெனில், இதுவரையில், 21ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர முடிய வில்லை. இப்போதும் பொதுஜன பெரமுனவுக்குள் ரணில் தொடர்பில் அதிருப்திகளை வெளியிடுவோர் இருக்கின்றனர். அந்த வகையில்,
ரணில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார் என்பது உண்மைதான்.
ஆனால், இதனால் யாருக்கு நெருக்கடி என்பதுதான் கேள்வி – ரணி லுக்கா அல்லது மக்களுக்கா?
ஒருவேளை ரணிலை தோற்கடித்து, பிரதமர் பதவியிலிருந்து அகற்றி னாலும்கூட, ரணில் என்னும் தனிநபருக்கு எந்தவொரு நஷ்டமும் இல்லை. ஏனெனில், ரணில் கடந்த தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்தவர். ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை வைத்துக் கொண்டு, பத்து மாதங்கள் காணாமல் போயிருந்தவர். அவர் மீளவும் பாராளுமன்றத் திற்குள் வந்த காலம் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாதளவுக்கு ராஜபக்ஷக்கள் வீழ்ச்சிடையத் தொடங்கிய காலமாக இருந்தது. நாட்டின் நிலைமைகளை அவ்வப்போது எச்சரித்துக் கொண்டிருந்த ரணில்
விக்கிரமசிங்க, தான் எச்சரித்ததுபோல் விடயங்கள் நடப்பதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.
அவர் விடயங்களை நன்கு கணித்து, திட்டமிட்டுத்தான், பத்து மாதங்கள் கழித்து, பாராளுமன்றம் வந்தாரா? அல்லது விடயங்கள் தற் செயலாக நடந்த னவா? இப்படியான கேள்விகளுக்கான பதில், அவரவர் ஊகத்துக்கு உரிய வையாகும். அதேவேளை, அவர், ராஜபக்ஷக்களை காப்பாற்றிக் கொண் டிருக்கின்றாரா? – இதுவும் அவரவர் ஊகத்துக்குரியது. ஆனால், வேறு எவரும் இல்லாத நிலையில்தான் ரணில் இந்த இடத்தில் இருக்கின்றார் என்பது மட்டும் உண்மை. மூன்று நேரம் உணவு
கிடைப்பதை உறுதிப்படுத்துவதுதான் தனது முதன்மையான பணியென்று, பிரதமராக, பதவியேற்ற போது, ரணில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தற்போதைய நெருக்கடி நிலைமை அவரின் கூற்றுக்கு அமைவாக இல்லை. அதிகரித்துச் செல்லும் அடிப்படையான பொருட்களின் விலைகளை நோக்கினால், ஏழை மக்கள், ஒருவேளை உணவு உண்பது கூட பிரச்னையாகிவிடலாம் என்னும் நிலைமையே காணப்படுகின்றது. நிலைமை இந்த நிலையில் தொடர்ந்தால், ரணிலின் நியமனத்தை சாதகமாக நோக்கியவர்களும் சலிப்படையக்கூடும்.
ஆனால், எவரின் சலிப்பும், எவரின் விமர்சனமும், எவரின் கண்ட னங்களும் நாட்டை முன்நோக்கி நகர்த்தப் போவதில்லை. ஏனெனில், நாட்டின் இன்றைய நிலைமை இவற்றுக்கெல்லாம் அப்பால்பட்டது.