ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் அதிகாரம் ஜனாதிபதி ரணிலுக்கு கிடைக்கும் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் – குமார வெல்கம

0
137

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு,நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் முன்னிலை தரப்பினர்கள் இடமளிக்க போவதில்லை. 2023, பெப்ரவரிக்கு பிறகு ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என புதிய லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார்.

கோட்டபய ராஜபக்ஷ அரசியலுக்கு தகுதியற்றவர். தவறான ஆலோசனைகளினால் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்க முயற்சிக்க கூடாது.

எமது பேச்சுக்கள் சரியில்லை எதையாவது கூறி விடுவோம். மஹிந்த ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு துரதிஷ்டவசமாக எடுத்த தீர்மானம் இன்று முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரேஷ்ட தரப்பினருக்கு முன்னுரிமை வழங்கியிருந்தால் அதிகாரத்தில் நிலைத்திருந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் திங்கட்கிழமை (5) இடம்பெற்ற புதிய லங்கா சுதந்திர கட்சி அலுவலக திறப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டாவது,

புதிய லங்கா சுதந்திர கட்சியை உருவாக்கியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.கட்சி என்ற ரீதியில் இனிவரும் காலங்களில் அமோக வெற்றிப்பெறுவோம். அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும் என்பதை எதிர்பார்க்கிறேன்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆலோசனை முழுமையாக கிடைக்கப்பெறும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க உரிய நேரத்தில் ஜனாதிபதியாகி,உரிய நேரத்தில் ஓய்வுப்பெற்றார்.ஏனையோர் அவ்வாறு செய்யவில்லை. அரசியலமைப்பை திருத்தம் செய்து அவர் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகியிருந்தால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தலைமைத்துவம் கிடைத்திருக்காது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறந்தவராக காணப்பட்டாலும் நாட்டை காட்டிலும் குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கினார்.2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அரசியல் ரீதியில் சிரேஷ்ட தரப்பினருக்கு முன்னுரிமை வழங்கியிருந்தால் இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்காது. துரதிஷ்டசமாகவே அவர் அன்று அத்தீர்மானத்தை எடுத்தார்.

கோட்டபய ராஜபக்ஷ இரண்டரை வருடகாலத்திற்குள் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்து விட்டு சுரங்க பாதை ஊடாக நாட்டை விட்டு வெளியேறினார்.அவர் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார்.குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்வுடன் காலத்தை கழிப்பதற்கு வாழ்த்துகிறோம்.

முன்னான் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்க வேண்டும் என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள்.கோட்டபய ராஜபக்ஷ அரசியலுக்கு தகுதியற்றவர்,ஆகவே அவர் அரசியலுக்கு மீண்டும் பிரவேசிக்காமல் இருக்க கூடாது.மிகுதி காலத்தை குடும்பத்தாருடன் நிறைவு செய்துக்கொள்ளலாம்.

பிறரது ஏமாற்று பேச்சுகளுக்கு அகப்பட வேண்டாம்,ஏனெனில் நாங்களும் பாராளுமன்றத்தில் இருக்கிறோம்.எமது பேச்சுக்கள் சரியில்லை ஆகவே நாங்கள் என்ன கூறுவோம் என எமக்கு தெரியாது.இதுவே கோட்டபய ராஜபக்ஷவிற்கு வழங்கும் ஆலோசனை.

நாடு மிக மோசமான நெருக்கடியினை தற்போது எதிர்கொண்டுள்ளது. உண்மை போராட்டகாரர்களினால் தான் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து சற்றேனும் மீண்டுள்ளது.உண்மை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் போராட்டத்தின் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தார்கள்.என் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களை மன்னிக்கிறேன்.அவர்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளேன்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது இலகுவல்ல,தொழில் வாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்கள் மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு மக்களின் நன்மதிப்பை பெற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுனவின் முன்னிலை உறுப்பினர்கள் இடமளிக்க போவதில்லை. அக்கட்சியில் பெரும்பாலானோர் பொறாமையாகவுள்ளார்கள்.

பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வைத்திருந்த ரணில் விக்கிரமசிங்க  ஜனாதிபதி, மூன்று ஆசனங்களை வைத்திருந்த தினேஷ் குணவர்தன பிரதமர்,69 இலட்ச மக்களின் ஆதரவை பெற்றவர் வீட்டில் இதுவே உண்மை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுமையுடன் செயற்பட வேண்டும். 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு பிறகு ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும்.பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு அரசியல் ரீதியில் கடன்பட்டுள்ளேன்.அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முடியும்.இடதுசாரி தரப்பினரை ஒன்றிணைத்து சவால்களை வெற்றிக்கொள்ள முடியும்.அரசியல் ரீதியில் வேறுப்பட்டுள்ள தரப்பினரை நிச்சயம் ஒன்றிணைக்க முடியும் என்றார்.