இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் 6.07 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய சுற்றுலாத்துறை நிறுவனத்தின் இந்தியா மற்றும் வளைகுடாவுக்கான வதிவிட முகாமையாளர் நிஷான்ட் கஷிகர் தெரிவித்துள்ளார்.
2019 இல் ஜனவரியில் ஏழாவது இடத்தில் காணப்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த இந்திய உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை, 2024 இல் ஜனவரியில் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளதோடு இது 6.07 சதவீத வளர்ச்சியைக் காண்பிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் பி.ரி.ஐ. க்கு மேலும் குறிப்பிடுகையில், 2019 ஜனவரியில் 24 ஆயிரத்து 700 இந்திய உல்லாசப் பயணிகள் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்தனர். இந்த எண்ணிக்கை 2024 ஜனவரியில் 26 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கடந்த வருடம் பெப்ரவரி முதல் இவ்வருடம் ஜனவரி வரையான காலப்பகுதியில் 4,02,200 இந்திய சுற்றுலாப் பயணிகள் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவின் சுற்றுலா மேம்பாட்டுக்காக இந்தியாவில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் கீழ் விஸா வழங்கும் நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதோடு விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2019 இல் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் வாரத்திற்கு 08 விமான சேவைகள் நடாத்தப்பட்டதோடு தற்போது அச்சேவை புதுடில்லி, பெங்களுர், மும்பை ஆகிய பிராந்தியங்களையும் இணைக்கும் வகையில் 28 விமான சேவைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் தனித்துவமான நிலப்பரப்புகள், வனவிலங்குகள் மற்றும் எமது நகரங்களின் பல்கலாசார ஒழுங்கமைப்பு என்பன இந்திய உல்லாசப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கக்கூடியனவாக அமைந்துள்ளன என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.