25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆபிரிக்க குழாத்தில் மீண்டும் டெம்பா

இலங்கைக்கு எதிராக அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான தென் ஆபிரிக்க குழாத்தில் மீண்டும் அணித் தலைவர் டெம்பா பவுமா இணைந்துகொண்டுள்ளார்.

இடது முழங்கையில் காயமடைந்ததால் அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் விளையாடாமல் இருந்த வழமையான அணித் தலைவர் டெம்பா பவுமா பூரண குணமடைந்ததை அடுத்து குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு 14 வீரர்களைக் கொண்ட குழாத்தை தென் ஆபிரிக்கா நேற்றுமுன்தினம் அறிவித்தது.

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியவர்களில் மேலும் இருவர் நீக்கப்பட்டு மார்க்கோ ஜென்சென், ஜெரால்ட் கோயெட்ஸி ஆகியோர் அணிக்கு மீளழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர் அவர்கள் இருவரும் முதல் தடவையாக டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

‘டெம்பா குணமடைந்த பிறகு அணியை மீண்டும் வழிநடத்த இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அவரது தலைமைத்துவமும் திறிமையும் அணிக்கு விலைமதிப்பற்றவை’ என தென் ஆபிரிக்க டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்றுநர் ஷுக்ரி கொன்ரட் தெரிவித்தார்.

‘டெம்பா ஓய்வில் இருந்தபோது பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் அணித் தலைமையைப் பொறுப்பேற்று அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஏய்டனுக்கு நன்றிகூற விரும்புகிறேன்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

வேகப்பந்துவீச்சாளர்களான ஜென்சன், கோயெட்ஸீ ஆகியோரது மீள்வருகையும் அணிக்கு வலு சேர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

தென் ஆபிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் என்பதால் கெகிசோ ரபாடா, டேன் பேட்டர்சன், வியான் முல்டர் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர். இதற்கு அமைய 5 பந்துவீச்சாளர்கள் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

அதேவேளை, கேஷவ் மஹாராஜ், சேனுரன் முத்துசாமி ஆகிய இருவரும் பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பெறுகின்றனர்.

நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகளுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா 62.50 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும் இந்தியா 58.33 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இலங்கை 55.56 சதவீத புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நியூஸிலாந்து 54.55 சதவீத புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் தென் ஆபிரிக்கா 54.17 சதவீத புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன.

தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பனில் எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிவரையும் இரண்டாவது  டெஸ்ட்   போட்டி போர்ட் எலிஸபெத்தில் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதியிலிருந்து 9ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles