அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். ராய்ட்டர்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக 42வீதம் பேர், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு 51வீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
முக்கிய மாகாணங்களான புளோரிடா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பிடனுக்கே அமோக ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நியூயார்க் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பிலும் ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் நாடுகள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் பிரச்சாரம் செய்து வந்தார்.
ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார். அமெரிக்காவைப் பார்த்து உலக நாடுகள் சிரிக்கும் என்று ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
எழுபத்தேழு வயதாகும் ஜோ பிடன் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும், எழுபது நான்கு வயதாகும் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும் சரித்திரம் படைக்கலாம்.