இந்தியா முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கினாலும் இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தற்போதும் சுமார் 50 ஆயிரம் பேர் தினமும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதைப்போல சாவு எண்ணிக்கையும் சில நூறுகளில் தினமும் நிகழ்ந்து வருகிறது.
இந்த நெருக்கடியான சூழலில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு நாளை முதல் 3 கட்டங்களாக நடைபெறும் தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் பீகாரில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பீகார் தேர்தல் அறிவித்தபோதே, அங்கு பிரசார நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது. இதற்காக சமூக இடைவெளி, முக கவசம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்து அளித்து இருந்தது.
இந்த விதிமுறைகள் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பின்பற்றப்பட்டு இருந்தன. தேரி, கயா, பகல்பூர் போன்ற இடங்களில் அவர் பங்கேற்ற கூட்டங்களில் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் இந்த விதிமுறைகளை கவனமுடன் மக்கள் கடைப்பிடிக்க வைத்தனர். இதைப்போல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற பிரசார கூட்டங்களிலும் இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டு இருந்தன.
ஆனால் பிற தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம் இந்த விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு இருந்தன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமும் இன்றி அனைத்து கட்சிகளின் கூட்டங்களிலும் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கும்பல், கும்பலாக கூடியிருப்பதை காண முடிகிறது.
அங்கு பிரசாரத்தில் பங்கேற்று வந்த மாநில துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி, பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மத்திய மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், முன்னாள் மாநில மந்திரி நரேந்திர சிங் உள்பட பல தலைவர்கள் கொரோனாவிடம் சிக்கியுள்ளனர். எனினும் அங்கு மக்களிடம் விழிப்புணர்வை காண முடியவில்லை.
முக கவசம் அணியாதது ஏன்? என கேட்கும்போது, பலரும் அதற்கு அலட்சியமான பதில்களையே தருகின்றனர். அதாவது ‘வீட்டில் மறந்து வைத்துவிட்டேன்’, ‘கடுமையான வெயில் காரணமாக அணிய முடியவில்லை’ இதுபோன்ற பதில்களையே அளித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மாவட்டம்தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்கப்படுகிறது.
இதில் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மீது பேரிடர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. எனினும் கொரோனா அலட்சியம் தொடர்கிறது.
பீகார் தேர்தல் களத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு எதிரான இந்த அலட்சியப்போக்கு மாநிலத்தில் நோய் தொற்றை அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் வரை 2.12 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.