பிரித்தானிய பிரதமரின் அசமந்த போக்கு மேலும் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொல்ல இருக்கின்றது. கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது.
இன்னும் சில நாட்களில் இங்கிலாந்தில் மிக இறுக்கமான லொக்டவுன் (வீட்டு முடக்கம்) கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறான இறுக்கமான லொக்டவுன் காலத்திலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை திறந்து வைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால் இது தேவையான அளவு சாதக தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே உள்ளது.
பழமைவாதமும் சமூக சிந்தனையும்
பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் தலைமையும் கொன்சவேடிவ் கட்சியின் பழமைவாத தனிநபர்வாத சிந்தனை முறையும் இதுவரை எண்பதிணாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்து உள்ளன.
‘சமூகம்’ என்ற ஒன்றில்லை என்ற சிந்தனை முறையோடு வாழ்கின்ற இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றனர். பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது ‘சமூகம்’ என்ற ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவரோ அவருடைய கட்சியின் கொள்கைகளோ அதனை ஒரு போதும் பிரதிபலிக்கவில்லை.
இந்தப் புதிய பிரித்தானிய அரசு கோவிட்-19 யை கையாண்ட முறை மிக மிக மோசமானது. தனது அரசின் விஞ்ஞான மருத்துவக் குழுக்களின் ஆலோசனைகளை புறம்தள்ளிவிட்டு குறுக்கு வழியில் தேர்தலை வெற்றிகொள்ளத் திட்டம் வகுத்த டொமினிக் கம்மிங்ஸ் போன்ற மண்டையன் குழுக்களின் ஆலோசனையின் படியே பொறிஸ் ஜோன்சன் ஆட்சி செய்கின்றார்.
அவருடைய நிதியமைச்சர் சான்ஸ்லர் ஒப் எக்செக்கர் ரிசி சுநாக் கூட புதிதான எந்த பொருளாதாரக் கொள்கை வகுப்பையும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மன் அரசு அறிவித்த உதவி நலத்திட்டங்களை தாங்களும் மறுநாள் அறிவித்தனர். அல்லது பல வாரங்கள் கழித்து அறிவித்தனர்.
தாமதித்த ஆட்சியாளர்கள்
ஐரோப்பிய நாடுகள் மார்ச்சில் லொக்டவுனுக்குச் சென்றபோது பிரித்தானிய அரசையும் லொக்டவுன் அறிவிக்க அழுத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிரதமர் மறுத்துவிட்டார். அதனால் லொக்டவுன் அறிவிக்க ஏற்பட்ட தாமதத்தால் பிரித்தானியாவின் கோவிட்-19 பரவலும் மரணமும் உலக எண்ணிக்கையில் உச்சத்தைத் தொட்டது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இருவாரங்கள் முன்னதாக லொக்டவுனை அறிவித்து இருந்தால், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
முதற்தடவை கோவிட்-19 பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை; தவறு இழைக்கப்பட்டுவிட்டது என்று எடுத்துகொண்டாலும், இரண்டாவது அலை பாராதூரமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கை ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது.
சுயபுத்தி இல்லாத பிரதமர்
அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு தொடர்ச்சியாக அரசை எச்சரித்து வந்துள்ளது. பிரித்தானியாவில் வேல்ஸ், நொர்தன் ஐலன்ட்ஸ் அரசுகள் ஏற்கனவே ஒரு மாத லொக்டவுனை அறிவித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் பொறிஸ் ஜோன்சன் ‘தனக்குத்தான் தெரியும் தான் தான் படைப்பன்’ என்று சன்னதம் ஆடிக்கொண்டு திரிகின்றார். ஒரு மனிதனுக்கு சுயபுத்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் புத்தி சொல்லக் கூடியவர்களின் புத்திமதியயையாவது கேட்கவேணும். இந்த இரண்டும் இல்லாத ஒருவர் பிரித்தானிய வல்லரசுக்கு பிரதமர் ஆனால் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது.
கடந்த ஆறு மாதகாலத்திற்கு மேலாக கொரோனா தொற்று இல்லாத நாடாக தாய்வான் இருக்கின்றது. தங்களைப் பற்றிய பெரிய விம்பங்களைக் காட்டிக்கொண்டு திரிகின்ற இந்த காலனித்துவ சிந்தனையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் விடுபட வேண்டும். கொரோணாவுக்கு பிளீச் குடிக்க கொடுக்கும் அளவுக்கு – அமெரிக்க வல்லரசின் ஏஜென்டாக இருந்தாலும்; அவ்வளவு முட்டாள்கள் என்று சொல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அந்த நிலைக்குத் தான் பிரித்தானிய வல்லரசின் நிலை வந்து கொண்டிருக்கிறது.
அண்ணனும் தம்பியும் ஒரே மாதிரி
இன்றைய அமெரிக்க பிரித்தானிய வல்லரசுகள் வெளியிடுகின்ற அறிக்கைகள் ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்றளவிற்கு கேவலமாகிவிட்டது. போதை ஏறியவுடன் வருகின்ற உசாரில் ‘வெட்டுவோம் பிடுங்குவாம்’ என்ற கணக்கில் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும், அவருடைய கிட்டத்தட்ட அண்ணன் மாதிரியான டொனால்ட் ட்ரம்மும் விடுகின்ற ரீல்கள் உள்ளன. கோவிட்-19 க்கு வக்சீன் கோடிக்குள் இருக்கின்றது, ‘தைப்பொங்கலுக்கு தமிழீழம்’ என்ற கணக்கில் தான் ‘புதுவருசத்தில் கோவிட்-19 க்கு கோவிந்தா’ என்றெல்லாம் பிலா விடுகின்றார்கள்.
சமூக மட்ட பரவலை மட்டுப்படுத்தல்
உண்மை நிலவரம் அதுவல்ல. கோவிட்-19 வக்சின் அண்மைக்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அவ்வாறு வந்தாலும் அதனை முழு மக்கள் தொகைக்கும் வழங்குவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அது அரசுடைய நோக்கமும் கிடையாது. இந்த கோவிட்-19 ஒட்டுமொத்த மக்கள்கொகைக்கும் பரவி இயற்கையான நிர்ப்பீடண சக்தி ஒவ்வொருவரது உடலிலும் ஏற்படுவதன் மூலமே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மக்கள் தொகைக்குள் இந்நோய் பரவுகின்ற போது அதனை ஒரே நேரத்தில் பரவ அனுமதித்தால் நாட்டில் உள்ள சுகாதார சேவைகளால் அதனை தாக்குப் பிடிக்க முடியாது. கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தால் காட்டாற்று வெள்ளத்தில் மக்கள் மரணிப்பது போல் தகுந்த சிகிச்சை இல்லாமல் பல்லாயிரம் மக்கள் மரணிக்க வேண்டி இருக்கும்.
அதனால் கோவிட்-19 மக்கள் தொகைக்குள்(சமூகத்துக்குள்) பரவுவதை மட்டுப்படுத்தப்பட்ட வீதத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த மட்டுப்படுத்தல் என்பது நாட்டின் சுகாதார சேவையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய எண்ணிக்கையயை வைத்து தீர்மானிக்கப்படும்.
நீர்ப்பீடணம்
பிரித்தானியாவில் இந்நோய்க் கிருமியானது இதுவரை 15 வீதமான மக்களுக்கு பரவி இருக்கலாம் என்று நியூ சயன்றிஸ்ட் இதழ் மதிப்பிடப்படுகின்றது. உலகில் ஈரானிலேயே கூடுதல் மக்கள் தொகைக்கு – 28 வீதம் – இந்நோய் பரவி உள்ளது. கீழுள்ள வரைபு வெவ்வேறு நாடுகளில் எவ்வளவு வீதமான மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒரு நாட்டின் எழுபது வீதமான மக்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டு இருந்தாலேயே அந்நாட்டில் மக்கள் குழும நீர்ப்பீடணம் ஏற்பட்டதாகக் கொள்ளமுடியும். அப்படிப் பார்க்கின்ற போது எல்லா நாடுகளுமே முழு நாட்டுக்குமான நீர்ப்பீடணத்தை எட்டுவதற்கு மிகத் தொலைவிலேயே உள்ளனர்.
த.ஜெயபாலன்