மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை பிரச்சினை தொடர்பாக நேற்று வெலிக்கந்த மகாவலி அலுவலகத்தில் இடம்பெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. கஜேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு பிரதேசத்தில் மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் சிங்கள மக்கள் சோளப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்காக நிலம் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமென கடந்த 23 ஆம் திகதி அமைச்சர் சாமல் ராஜபக்ச அவர்களைச் சந்தித்த்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞாகம் சிறீதரன், சாணக்கியன் இராசமாணிக்கம், ரெலோ அமைப்பைச் சேர்ந்த கருணாகரன், செல்வன் அடைக்கலம்நாதன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி சந்திப்பில் மேச்சல் தரை பகுதியில் சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்குவதனையும் குறித்த காணிகளில் சிங்கள மக்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதனையும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி கோரிக்கை தொடர்பில் தற்காலிக இணைக்கம் ஏற்பட்டதுடன், இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
குறித்த குழுவானது நேற்று திங்கட்கிழமை வெலிக்கந்தையில் உள்ள மாகவலி பிராந்திய அலுவலகத்தில் சந்தித்து குறித்த விடயம் பற்றி விரிவாக கலந்துரையாடிய பின்னர் குறித்த காணி அமைந்துள்ள மயிலத்தமடு பகுதிக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று கட்சியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், இளைஞர் அணிச் செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்த்தர்களுடன் குறித்த அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அங்கு சென்ற பின்னர்தான் குறித்த கூட்டம் கொறோனோ நெருக்கடி காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்ற விடயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
புதிய திகதி பின்னர் அறிவிக்கபடுமென குறித்த அலுவலத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.