27.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முஸ்லீம்களது உணர்வை மதிக்கிறேன்

“முகமது நபியின் கேலிச் சித்திரங்களால் அதிர்ச்சியடைந்திருக்கக் கூடிய முஸ்லிம்களது உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் அதற்காக வன்முறைகள் நியாயப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது”

“எழுதுவதற்கும் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் வரைவதற்கும் எனது தேசத்தில் உள்ள சுதந்திரத்தை நான் எப்போதும் பாதுகாப்பேன்..”

பிரெஞ்சு அதிபர் மக்ரோன் அல்ஜெஸீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

தனது வார்த்தைகள் சில தலைவர்களால் தவறாகத் திரிபுபடுத்தப்பட்டதே மக்களது சீற்றத்துக்கு காரணமானது என்றும் மக்ரோன் அந்த செவ்வியில் துருக்கிய அதிபர் உட்பட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை மறைமுகமாக சாடினார்.

முகமது நபி சம்பந்தப்பட்ட கேலிச் சித்திரங்கள் தொடர்பான மக்ரோனின் கருத்துகளால் அரபு உலக நாடுகளில் உருவாகியிருக்கும் கடும் எதிர்ப்புணர்வு களுக்கு மத்தியில் அவரது பிரத்தியேக செவ்வியை அல்ஜெஸீரா சனிக்கிழமை ஒளிபரப்பியது.

கட்டாரை தளமாகக் கொண்டியங்கும் அல்ஜெஸீரா தொலைக்காட்சியின் செய்தியாளருக்கு அளித்த சுமார் 55 நிமிட நேர நீண்ட செவ்வியில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு உருவாகக் காரணமான தனது கருத்துக்கள் குறித்து மக்ரோன் விளக்கமளித்திருக்கிறார்.

பொய்களும் சில தலைவர்களது தவறான கையாள்கையும் கேலிச்சித்திரங்கள் பிரெஞ்சு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டவை என்றவாறான எண்ணம் மக்கள் மத்தியில் உருவாக வழிவகுத்து விட்டன.

பெறுமதி ஏதுமற்றதும் அனுமதிக்க முடியாததுமான பிரெஞ்சு எதிர்ப்புணர்வுக்கு அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் சிலரது தவறான புரிதல்களும் தப்பான கையாள்கையுமே காரணமாகியுள்ளன.

அத்தகைய பொய்கள், தவறான புனைவுகளின் வெளிப்பாடாகவே கேலிச்சித்திரங்களை நான் ஆதரிக்கிறேன் என்ற உணர்வும் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

அந்தக் கேலிச் சித்திரங்களை அரசு தயாரிக்கவில்லை. அரசுடன் சம்பந்தம் இல்லாத சுதந்திரமான, சுயாதீனமான ஊடகங்களில் இருந்தே அவை வெளிவருகின்றன – என்று செவ்வியில் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

“சார்ளி ஹெப்டோ” வார இதழில் வெளியான நபியின் கேலிச் சித்தி ங்களை வகுப்பறையில் காண்பித்த சாமுவல் பட்டி என்ற ஆசிரியர் இஸ்லாமியத் தீவிரவாத இளைஞர் ஒருவரால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிரான்ஸை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதன் எதிரொலியா அரசுத் தலைவர் உட்பட அரசுப் பிரமுகர்கள் வெளியிட்ட கருத்துச் சுதந்திரம் சார்ந்த கருத்துக்களும், நாடெங்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒடுக்க உடனடியாக முடுக்கிவிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் பிரான்ஸில் வாழும் சிறுபான்மையின முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

பிரான்ஸ் தனது கேலிச்சித்திர பாரம்பரியத்தையும் குடியரசின் பெறுமானங்களையும் ஒருபோதும் கைவிடாது என்று ஆசிரியர் சாமுவல் பட்டியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் வைத்து மக்ரோன் கூறிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன.

நபியின் சித்திரங்களை வரைவதை தெய்வ நிந்தனையாகக் கருதும் இஸ்லாமிய நாடுகளில் மக்ரோனின் கருத்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

மக்ரோன் தன்னை “உளவியல் சிகிச்சைக்கு” உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று துருக்கிய அதிபர் எர்டோகன் வெளியிட்ட கருத்து நிலைமையை மேலும் மோசமாக்கியது. அரபுலகில் பிரெஞ்சு எதிர்ப்புணர்வு தீவிரமாகியது.

“கடந்த காலத்துப் படுகொலைகளுக்காக பிரான்ஸ் மீது ஆத்திரம் கொள்ளவும் மில்லியன் கணக்கில் பிரெஞ்சுக் காரர்களைக் கொல்வதற்கும் முஸ்லிம்களுக்கு உரிமை இருக்கிறது” என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் முகமட் (ஆயாயவாசை ஆழாயஅயன) தனது ருவீற்றரில் பதிவிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார்.

பாகிஸ்தான் முதல் பாலஸ்தீனம் வரை முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கி போராட்டங்களைத் தொடக்கினர்.நேட்டோ அணி நாடாகிய துருக்கி உட்பட அரபு நாடுகள் சிலவற்றின் தலைவர்களது அழைப்பை அடுத்து அந்நாடுகளில் பிரெஞ்சுப் பொருள்களை மக்கள் புறக்கணிக்கத் திரண்டனர்.

சவுதி அரேபியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்கானார். இந்த தாக்குதலை அடுத்து வெளிநாடுகளில் உள்ள பிரெஞ்சு தூதரகங்கள், தூதரகப்பணியாளர்கள், பிரெஞ்சு மொழிக் கல்லூரிகள், கலாசார நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles