யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள இரண்டு கடைகள் இன்று அதிகாலை உடைத்து பல இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.
கஸ்தூரியார் வீதியிலுள்ள ஒரு நகைக் கடை, துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையம் என்பவற்றுடன் ஒரு களஞ்சியமும் இவ்வாறு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது.
துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வங்கியில் வைப்புச் செய்யத் தயாராகவிருந்த நிலையில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா திருடப்பட்டுள்ளது.
இதேபோன்று நகைக் கடையின் கூரையைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் நகை மற்றும் ஒரு தொகை பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதேவேளை களஞ்சியத்தின் பின் கதவை உடைக்க முற்பட்டபோதும் எவையும் திருடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை திருட்டு இடம்பெற்ற இரு கடைகளிலும் கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டுள்ளபோதும் இரவு மின் இணைப்பை நிறுத்திச் சென்றதால் அவற்றில் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து தடயவியல் பொலிஸார் சகிதம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.