அமெரிக்காவின் அடுத்த அதிபராகவிருக்கிறார் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன். அவரது அரசில் இந்திய வம்சாவளி தமிழரான கமலா ஹாரிஸ் துணை அதிபராகவிருக்கிறார்.
அமெரிக்க அதிபராவதற்குரிய தகுதியை பெற மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270ஐ பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், முக்கிய போர்க்கள மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் கடைசியாக எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் நேற்று இரவு 10.30 மணி நிலவரப்படி ஜோ பைடன் பெற்ற தேர்தல் சபை வாக்குகளின் எண்ணிக்கை, 273ஐ கடந்தது. இதையடுத்து முன்னிலை நிலவரப்படி அமெரிக்க அதிபராவதற்கான தகுதியை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். அவரது தலைமையிலான அரசு இரண்டாயிரத்து இருபத்துயோராம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்பதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறது.
இதே வேளை, தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தரப்பு, தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ளாத மனநிலையில் இருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ஜோ பைடனுக்கான வெற்றி வாய்ப்பு சாத்தியமுள்ள அலுவல்பூர்வமற்ற கணிப்புகளை பிபிசி மேற்கொண்டது. அவை, ஏற்கெனவே வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற மாகாணங்கள் அடிப்படையில் இருந்தன. தற்போதைய நிலவரப்படி விஸ்கான்சின் மாகாணத்தில் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஜோ பைடனுக்கான வெற்றி வாய்ப்பு இறுதியாகி விட்டதால், 1990களுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் பதவியில் ஒரேயொரு முறை மட்டுமே வகிக்கக் கூடியவராக டொனால்ட் டிரம்ப் ஆகியிருக்கிறார்.
1900களில், அமெரிக்க தேர்தல் வரலாறு, இம்முறை நடந்த தேர்தலில்தான் அதிக வாக்குகளை பதிவு செய்தது. இதில், பைடன் 73 மில்லியன் வாக்குகளை இதுவரை பெற்றிருக்கிறார். இந்த அளவுக்கு வேறெந்த அதிபர் வேட்பாளரும் மிகப்பெரிய அளவில் வாக்குகளை பெற்றிருக்கவில்லை.
முன்னதாக, தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னைத்தானே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டு ட்விட்டர் பக்கத்தில் இடுகைகளை பதிவிட்டார். வாக்கு எண்ணிக்கை பல மாகாணங்களில் முடிவடையாத நிலையில், பல இடங்களில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
ஆனால், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், ஆரம்பம் முதலே அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடையும்வரை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டு வந்தார். அவர் பொறுமை காத்து வந்ததற்கான பலன் கடைசியாக பென்சில்வேனியா மாகாண வாக்குகள் எண்ணப்பட்டதன் முடிவில் கிடைத்திருக்கிறது. அவர் அதிபராவதற்கான தகுதியைப் பெறுவதற்கும் அந்த மாகாண வாக்குகளே உதவியிருக்கின்றன.
இதையடுத்து புதிய அதிபராகும் ஜோ பைடனின் அரசில் துணை அதிபராக இந்திய வம்சவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ{ம் பதவியேற்கவிருக்கிறார்.