25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஹொங் கொங் சிக்ஸஸ்: நேபாளத்தை கால் இறுதியில் வீழ்த்திய இலங்கை அரை இறுதியில் பங்களாதேஷை சந்திக்கிறது

ஹொங் கொங், மொங் கொக் மிஷன் றோட் மைதானத்தில் நடைபெற்றுவரும் ஹொங் கொங் சிக்ஸஸ் கிரிக்கெட் அரை இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய பிரபல அணிகளை எதிர்பாராதவிதமாக வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறிய நேபாளத்தை இன்று நடைபெற்ற கிண்ணப் பிரிவு கால் இறுதியில் 40 ஓட்டங்களால் வெற்றிகொண்டே இலங்கை அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

நேபாளத்திற்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 6 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் சந்துன் வீரக்கொடி 14 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களை விளாசி 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து ஹொங் கொங் சிக்ஸ் விதிகளுக்கு அமைய ஓய்வுபெற்றார்.

அணித் தலைவர் லஹிரு மதுஷன்க 8 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களையும் லஹிரு சமரக்கோன் 5 பந்துகளில் 22 ஓட்டங்களையும் தானுக்க தாபரே 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் (6) இழந்து 83 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ராஷித் கான் 55 ஓட்டங்களையும் நாராயண் ஜோஷி 13 ஓட்டங்களையும் பெற்றனர். ராஷித் கான் 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது சிக்ஸ் ஒன்றை விளாசி 55 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் லஹிரு சமரக்கோன் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு மதுஷன்க 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் தனஞ்சய லக்ஷான் 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: லஹிரு சமரக்கோன்

பிரதான கிண்ண பிரிவுக்கான அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷை நாளை முற்பகல் 11.30 மணிக்கு இலங்கை எதிர்த்தாடும். இந்த இரண்டு அணிகளும் டி குழுவுக்கான லீக் போட்டியில் சந்தித்துக்கொண்டபோது இலங்கை 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை பாகிஸ்தான் எதிர்த்தாடும். இந்த இரண்டு அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles