மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ரணில் விக்கிரமசிங்க, அவர் இப்போது ஜனாதிபதியாக இருக்கிறார்.
அவர் பேச்சுக்கு அழைத்ததும் நிபந்தனை இல்லாமல் பேசப்போகிறார்கள் கூட்டமைப்பினர், அவர்கள் பற்றி தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்று
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த செவ்வாயன்று பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை ஒன்று தொடர்பாக பதிலளித்தபோது மாவட்ட அபிவிருத்தி சபைகளை அமைக்க தான் தயார் என்று அறிவித்திருந்தது தொடர்பாக நேற்றைய இந்தப் பத்தியிலும் பார்த்திருந்தோம்.
அவர் மாகாண சபைகளை தவிர்த்து மாவட்ட அபிவிருத்தி குழுக்கள் பற்றி பேசவில்லை என்று அவர் தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டுவிட்ட பின்னர்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி, ‘இல்லை இல்லை ரணில் மாவட்ட அபிவிருத்தி சபைகள் பற்றி என்னோடு இதற்கு முன்னரும் பேசியிருக்கிறார்.’ என்று புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இந்தத் தகவலை தான் இதற்கு முன்னரும் தெரிவித்திருந்தார் எனவும் கூறியுள்ள அவர், இதுபற்றி எப்போது எங்கே தெரிவித்திருந்தார் என்பதையும் கூறினால் நல்லது.
அவரின் இந்த தகவல் தமிழ் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முதல் நாளன்று தன்னைச் சந்திக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்களின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய வஜிர அபேகுணவர்த்தனவின் (அப்போது அவர் எம். பியும் அல்ல என்பது வேறு விடயம்) வீட்டில் தான் ரணிலை சந்தித்தார் என்றும், அப்போது ரணில் தன்னிடம் இனப் பிரச்னைக்கு தீர்வாக இந்த மாவட்ட அபிவிருத்தி சபைகள் தொடர்பாகத்தான் பேசினார் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கிறார்.
ரணில் பிரதமராக பதவியேற்பதற்கு முதல் நாள், அதாவது முதல்நாளில்கூட அவர் பிரதமராவார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
சஜித்திடமும் பதவியை பொறுப்பேற்கவருமாறு கோட்டாபய அப்போது கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்தகைய முக்கியமான நாளில் ரணிலுக்கு நினைவுக்கு வந்தவர் கஜேந்திரகுமார்தான்.
அதுவும் தமிழர்களுடைய இனப் பிரச்னையை இனியும் நீடித்துச் செல்ல விடமுடியாது என்று கதைப்பதற்காகத்தான் இவரை அழைத்திருக்கிறார்.
அப்போதே அவர் சமஷ்டியை சாத்தியமற்றது என்று நிராகரித்ததாகவும் கஜேந்திரகுமார் கூறியிருக்கிறார்.
இதனை அவர் இதற்கு முன்னர் எப்போது வெளியே சொன்னார் என்பது தெரியவில்லை.
ஆனால், தான் இதைப்பற்றி முதலும் சொன்னார் என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த மே ஒன்பதாம் திகதி நாடு அல்லோலகல்லோலப்பட்டது.
ஆளும் கட்சி எம். பிக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
அந்த நெருக்கடியில் மகிந்தர் அன்று இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலை.
பதினோராம் திகதி மாலை அப்போதைய ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிமரசிங்கவுக்கும் இடையே நீண்டநேரம் நடைபெற்ற இரகசிய சந்திப்பை அடுத்து
மறுநாள் ரணில் பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றார்.
அதாவது பன்னிரண்டாம் திகதி ரணில் பிரதமராகிறார்.
அதற்கு முதல் நாள் கோட்டாபயவுடனான நீண்ட இரகசிய சந்திப்பையடுத்து ரணில் சந்தித்தது கஜேந்திரகுமாரை.
எதற்காக என்றால் இனப்பிரச்னையை இனியும் நீடிக்க அனுமதிக்கமுடியாது என்பதால் என்கிறார் கஜன்.
இது இரண்டு விடயங்களை சொல்கினறது.
முக்கிய பதவியொன்றை ஏற்பதற்கு முதலாக தனது நெருக்கமானவர்களை சந்திக்க வேண்டும் ஆலோசனை பெறவேண்டும் என்றே எவரும் நினைப்பார்கள்.
ரணிலின் நண்பர் சுமந்திரன்தான் என்றும் இருவரும் நாடகமாடுகிறார்கள் எனவும் அந்தப் பேட்டியிலும் சொல்லும் கஜன், ரணிலின் உண்மையான நண்பன் தான்தான் என்பதை சொல்ல வருகிறாரா?
அல்லது, இத்தனை நெருக்கடி, பதற்றத்துக்கு மத்தியிலும் இனப்பிரச்னையை தீர்ப்பதற்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை சொல்ல வருகின்றாரா?
பிரச்னையை தீர்க்கவேண்டும் என்று இத்தனை கரிசனையோடு இருக்கின்ற தலைவர் ஒருவரால்தான் இதனை முடித்து வைக்கவும் முடியும்.
அவர்கூட புலிகளுடனான பேச்சு காலத்தில் சமஷ்டியை வழங்கவும் தயாராக இருந்தவர்தான்.
அது சரி, அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்றுவேறு கஜேந்திரகுமார் கூறுகிறார்.
இரண்டாயிரத்து பத்திலும் பதினைந்திலும் தமிழ் மக்களும் தான் உங்களை நிராகரித்துவிட்டார்கள் என்பதற்காக நீங்கள் அரசியலில் இருக்கவில்லையா?
மக்கள் நிராகரிப்பதும் பின்னர் ஏற்றுக்கொள்வதும் அரசியலில் புதிய விடயமல்ல என்பது உங்களுக்குப் புரியாததல்ல.
ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கமேகூட ரணிலுடன் நிபந்தனை இன்றியே பேச்சுக்கு சென்றார்கள்.
அவர்களின் இலட்சியம் தனிநாடுதான் என்றாலும் அதற்காக பேசுவதற்காக அவர்கள் செல்லவில்லை.
நமது இலட்சியம் ஒரு நாடு இரு தேசம்தான் என்றாலும் பேசித்தானே பெறமுடியும்.
- ஊர்க்குருவி