தேர்தலில் போட்டியிடுவதும், வெற்றிபெற்ற பின்னர் புலம்பெயர் கோடீஸ்வரரின் கட்சியில் சேர்ந்து அவர்களோடு பணியாற்றுவதற்காக- அவர்களின் நிதி வசதிகளுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் பற்றி கடந்த வெள்ளிக்கிழமை எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் பத்தியில், அவ்வாறு கட்சி தாவினால் போட்டியிட்டு வெற்றி பெறுகின்ற கட்சி இவர்கள்மீது கட்சித் தாவலுக்கு எதிராக நடவ டிக்கை எடுத்தால், அவர்கள் பதவியை இழக்கவேண்டி வரும் என்றும் இது ‘நொண்டிக் குதிரை மீது பணம் செலுத்துவது போன்றது’ எனவும் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, நண்பர் ஒருவர் சிறிய குறிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார்.
‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், கட்சி தாவுகின்றவரே கட்சி யின் தலைவராகவும் இருந்துவிட்டால், அவர்மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றீர்களா?’ இதுதான் அந்த நண்பர் அனுப்பிய குறிப்பிலிருந்த கேள்வி. நண்பரின் கேள்வி நியாயமானதுதான். ஒரு கட்சியே ஒட்டுமொத்தமாக அவ்வாறு செல்வதற்கு முடிவெடுத்து பணியாற்றுகிறது என்றும், இன்னும் சிலர் வெற்றி பெறுவார்களா என்பது தெரியவில்லை. அப் படி வெற்றி பெற்றாலும் அவர்கள் அவ்வாறு கட்சி தாவினாலும் அவர்களின் தற்போதைய கட்சி நடவடிக்கை எடுக்கக்கூடிய நிலையில் இல்லை எனவும் ஒரு கொசுறுச் செய்தி தெரிவித்தது.
இனி இன்று எழுத வந்த விடயத்துக்கு வருவோம். காலை அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தபோது வழியில் ஒரு வீட்டுச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை அந்த வீட்டுக்காரர் மிகுந்த சிரமப் பட்டு அகற்றிக் கொண்டிருந்தார். சைச்கிளை நிறுத்தி, அவரிடம் கேட்டேன், ‘தேர்தல் முடியும்வரை இதனை இப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால் நல்லது அல்லவா? இல்லையெனில் இன்று நீங்கள் அகற்றிய பின்னர் நாளை இரவு இன்னுமொரு கட்சிக்காரர் வந்து ஒட்டுவார், நீங்கள் பிறகு நாளையும் அகற்றவேண்டுமே?’. அவருக்கு வந்த கோபத்தில், ஏதோ நானேதான் ஒட்டியதுபோல என்னை ஏற இறங்கப்பார்த்துவிட்டு சொன்னார், ‘பாரும் எவ்வளவு அழகாக பெயின்ற் அடித்து மதிலை வைச்சிருக்கிறன்.
இந்த கோதாரியில போவாருக்கு நோட்டீஸை ஒட்டேக்க ஒரு மனச்சாட்சி வேண்டாமா?’ அவருடைய கோபம் நியாயமானதுதான். அது அவர் வீட்டுச் சுவரில் மட்டுமல்ல, இப்படி நகரம் முழுவதும் தேர்தல் வேட்பாளர்கள் அசிங்கப்படுத்தி வைத்திருப்பது உண்மைதான். ஆனாலும் எனது கேள்விக்கு அவரிடமிருந்து இன்னமும் பதில் வராததால் திரும்பக் கேட்டேன், ‘நீங்கள் இப்ப அகற்றினாலும் இதே ஆட்கள் இல்லாவிட்டாலும் வேறு ஆட்கள் வந்து ஒட்டுவார்களே’ என்று. ‘உண்மைதான் தம்பி, ஆனால், இதை அகற்றாவிட்டால் தொடர்ந்து எல்லோரும் ஒட்டுவார்களே. இப்படி அகற்றிவிட்டால் கொஞ்சம் எண்டாலும் மனச்சாட்சி உள்ளவர்களாவது ஒட்டமாட்டர்கள் அல்லவா?. அதைவிட முக்கியம், இதை அகற்றாமல் விட்டால் மற்றை யவர்களும் வந்து சுவர் முழுவதுமல்லவா ஒட்டிவிடுவார்கள்.’ அந்தச் சுவரொட்டிக்கு சொந்தக்காரர்களின் கட்சியின் ஆதரவாளராக அவர் இருந்தால், நிச்சயம் இந்தத் தேர்தலில் அவர்களுக்கு வாக்குப் போடுவாரோ தெரியவில்லை.
இப்போதெல்லாம், சுவரொட்டிகளை அச்சிடுகின்ற செலவிலும் பார்க்க அதனை ஒட்டுவதற்குத்தான் வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது. அதை விட சுவரொட்டிகளை ஒட்டிக்கொடுப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள் பலர் வந்துவிட்டார்கள். இவர்களிடமே வேட்பாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு கொடுப்பதால், அவர்கள் எங்காவது ஒட்டினால் தமது வேலை முடிந்தது என்று நினைக்கின்றார்கள். இதனால் பாதிக்கப்படுவது அந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் மட்டுமல்ல, வேட்பாளர்களும்தான். இது ஒரு தீராத பிரச்னையாக ஒவ்வொரு தேர்தலிலும்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
மதில்களில் சுவரொட்டிகளை ஒட்டுவதென்றால், அந்த மதில்களின் சொந்தக்காரர்களின் அனுமதியுடன்தான் ஒட்ட வேண்டும், இல்லையேல் மதில் சொந்தக்காரர்கள் முறையிட்டால் அதற்கு வேட்பாளர்களே பொறுப் பேற்க வேண்டும் என்று தேர்தல் திணைக்களமோ அல்லது பொலிஸாரோ ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினால் இந்த மாதிரியான நெருக்கடிகள் ஏற்படாது. தமிழகத்தில் தங்கள் மதில்களில் அரசியல் விளம்பரங்களை எழுதுவதற்கு, மதில் உரிமையாளர்களே கட்டணம் வாங்கிக்கொண்டு அனுமதி வழங்குவார்கள்.
அதுபோல மதில் சொந்தக்காரர்கள் விரும்பினால் மாத்திரமே சுவரொட்டிகளை ஒட்டலாம் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இல்லையெல் ஒட்டப்படும் சுவரொட்டிக்கு வேட்பாளர்கள் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும்போது தெற்கிலிருந்து ஓர் அரசியல் பிரமுகர் பேசினார்.
எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகளைப் பற்றி பேசிய அவர், ஆளும், தேசிய மக்கள் சக்தி பதினைந்து ஆசனங்களைப் பெற்றுள்ள போதிலும் எதிரணிகள் எல்லாம் ஒன்றிணைந்தால் ஆட்சியமைக்கக் கூடியவாறே முடிவுகள் வந்திருக்கின்றன – என்றார். அதுபற்றி அவர் மேலும் விபரிக்க முயன்றபோது, நான் இடைமறித்து சொன்னேன், ‘இந்த உளளூராட்சி தேர்தல் முறையே தவறானதுதானே. அதை வைத்து விமர்சிப்பது தவறு’ என்று. அதற்கு அவர் சொன்னார், அதுவல்ல, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அங்கு பெற்ற வாக்குகள், ஐம்பத்தி ஆறு வீதம். ஆனால் இப்போது பெற்றது நாற்பத்தி இரண்டுதான்..’ இதுபற்றி ஆராய்வது என்றால் இன்று இந்தப் பத்தி போதுமான தல்ல. பிறிதொரு நாளில் பார்ப்போம்.!