இலங்கை கடற்பகுதிக்குள் தினமும் 2,000 முதல் 3,000 இந்திய மீன்பிடிப்படகுகள் உள்வரும் நிலையில் அவற்றை தடுக்க முடியாதுள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிடுவதால் ”லைசென்ஸ் ” முறை மூலம் அந்தப்படகுகளின் வருகையை கட்டுப்படுத்துவதுடன் ”லைசென்ஸ் ” மூலம் கிடைக்கும் பணத்தை அப்பகுதி மீனவர்களுக்கு பிரித்துக்கொடுக்கவும் கலந்துரையாடுகின்றோம். இழுவை மடி வலை மீன்பிடிக்கு ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கொழும்புதுறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இரு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஷ் நிர்மலநாதன் முன்வைத்த கருத்துக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அண்மையில் வந்த போது இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசினோம். அதேபோன்று வெளிவிவகார அமைச்சிலும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவுடன் அதிகாரிகளை அழைத்தும் கலந்துரையாடினோம்.
வடக்கிலுள்ள மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது முதலாவது அக்கறை. இரண்டாவது எமது மீன் வளங்களை எதுவித ஆபத்துமில்லாது பாதுகாக்க வேண்டும். மூன்றாவதாக இதற்காக ஒரு நீண்டகால தெரிவு ஒன்று வரவேண்டும். இவற்றை எப்படி செய்யலாம் என்ற கலந்துரையாடல் அவர்களுடன் இடம்பெறுகின்றது.
இதில் ஒரு தெரிவாக தமிழக மீனவர்களுக்கு ”லைசென்ஸ் ” ஒன்று கொடுக்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். அப்படி ”லைசென்ஸ் ” கொடுப்பதென்றால் அவர்கள் எமது பகுதிக்குள் எவ்வளவு தூரத்திற்கு வரலாம். அந்த ‘லைசென்ஸ்ஸுக்கு எடுக்கும் பணத்தை எமது மீனவர்களுக்கு பிரித்துக் கொடுக்கலாமா?அதை எமது மீனவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது பற்றி நாம் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றோம்.
எமது மீனவர்களின் தேவைகளுக்குத்தான் முதலிடம் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேநேரம் இலங்கை இந்தியாவுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் முடியாது. என்ன நடந்தாலும் கூட 2,000 முதல் 3,000 படகுகள் தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கடற்படையையும் அழைத்து இது தொடர்பில் பேசினோம். இதனை தடுக்க முடியாது என்றே கடற்படையும் கூறுகின்றது. எவ்வளவு தடைகளை ஏற்படுத்தினாலும் கூட அதற்கிடையில் அவர்கள் வந்துதான் போவார்கள்.
அதனால்தான் நாம் இரு நாடுகளுக்கிடையில் நல்லதொரு கலந்துரையாடல் இடம்பெற்று ஒப்பந்தமொன்றுக்கு வரமுடியுமானால் ”லைசென்ஸ் ”வழங்க முடியுமென்றால் இந்திய கடற்படை மூலம் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த முடியும். அடுத்ததாக ஒரு தரப்புக்கு ”லைசென்ஸ் ” கொடுத்தால் ”லைசென்ஸ் ” இல்லாதவர்கள் வருவதற்கு ”லைசென்ஸ் ” உள்ளவர்கள் விடமாட்டார்கள். இதன்மூலம் இவர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.
அத்துடன் இந்த ”லைசென்ஸ் ” திட்டத்தின் மூலம் எமக்கு காசு கிடைத்தால் அந்த காசை எமது மீனவர்களுக்கு பிரித்துக்கொடுத்தால் அவர்களுக்கும் பாதிப்பு இல்லாது போகும். அதேநேரம் இழுவை மடி வலை மீன்பிடிக்கு ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம். அப்படி அது தொடர்பில் எதாவது கலந்துரையாடல்கள் இடம்பெறுமானால் நிச்சயம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.