நிலைபேறான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கக் கூடிய, கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை விருத்திக்கான பொருளாதார ஒத்துழைப்புக்களையும், தொழில்நுட்ப ரீதியான அனுபவங்களையும், ஜப்பான் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுக்கோஷி ஹிடேகி உள்ளிட்ட குழுவினர், இன்று, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடிய போது, இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர், இலங்கையின் நீண்ட கால நட்பு நாடாக விளங்குகின்ற ஜப்பான், கடந்த காலங்களில், யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட, வடக்கு கிழக்கு மக்களின் வாழ்கை தரத்தை கட்டியெழுப்புவதில் காண்பித்த அக்கறையை நன்றியுடன் நினைவுபடுத்தினார்.
அதேபோன்று, எதிர்காலத்தில், கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், கடற்றொழில் அமைச்சு மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்;தார்.
குறிப்பாக, பாரம்பரிய கடற்றொழில் முறைமைகளைப் பயன்படுத்தி வருகின்ற யாழ்ப்பாண மாவட்டம் அடங்கலான, வடக்கு கிழக்கை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு, பொருத்தமான, நவீன தொழில்நுட்ப ரீதியான தொழில் முறைமைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியிருந்தார்.
அதேபோன்று, நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஏற்படுத்தித் தரக் கூடிய கடலட்டை, இறால் மற்றும் கடல்பாசி போன்றவற்றின் உற்பத்திகளை பரந்தளவில் விஸ்தரிப்பதற்கும், நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் அலங்கார மீன் வளர்ப்பு போன்றவற்றை விருத்தி செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சிகள் தொடர்பாக, ஜப்பான் தூதுவருக்கு தெளிவுபடுத்;திய கடற்றொழில் அமைச்சர், அவற்றுக்கான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புக்களை எதிர்;பார்ப்பதாகவும், கடலட்டைக் குஞ்சுகளை விரைவாக உற்பத்தி செய்யக் கூடிய வழிவகைகளை, அவசரமாக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், கடல் உணவுகளை பாதுகாக்கக்கூடிய களஞ்சிய வசதிகளைக் கொண்ட முச்சக்கரவண்டிகள் கிடைக்குமாயின், தரமான கடல் உணவுகள் மக்களை இலகுவாக சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், கடல் உணவுகள் சார்ந்த பெறுமதி சேர் உற்பத்திகளை, கிராமிய ரீதியில் மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுமானால், பொருளாதார ரீதியில் மேலதிக நன்மைகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சரின் எதிர்பார்ப்புக்ளை கேட்டறிந்தஜப்பானிய தூதுக் குழுவினர், இலங்கைக்கான மனிதாபிமான ஒத்துழைப்புக்களை வழங்குவற்கு, ஜப்பான் தயாராக இருப்பதாகவும், கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.
இச் சந்திப்பில், கடற்றொழில்அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா உட்பட்ட அமைச்சு அதிகாரிகளும், கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர்களான எஸ்.தவராசா மற்றும் பேராசிரியர் நவரட்ணராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.