காணி சீர்திருத்த ஆணைக்குழுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரையில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நடமாடும் சேவை இன்று மட்டக்களப்பில்
ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் இணைந்து இந்த நடமாடும் சேவையினை நடாத்தினர். காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு-திருகோணமலை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் உட்பட பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். இராஜாங்க அமைச்சர் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.