31 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிணற்று நீருடன் மலக்குழி கழிவுநீர் கலக்கும் அபாயம்!

கொட்டித் தீர்த்த மழை கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பெருக்கெடுத்த வெள்ள நீர் கிணறுகளை நிரப்பியுள்ளதோடு, பல இடங்களில் மலக்குழிக் கழிவு நீர் கிணற்று நீருடன் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொதித்தாறிய நீரைப் பருகுவதே பாதுகாப்பானது என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வடக்கு அதன் வருடாந்தச் சராசரி மழை வீழ்ச்சியான 1240 மில்லி மீற்றர் மழையை ஒக்ரோபர் மாதம் முடிவடைவதற்கு முன்பாகவே பெற்றிருந்த நிலையிலேயே பெங்கல் புயல் 720 மில்லி மீற்றர் மழையை மேலதிகமாகக் கொண்டு வந்து கொட்டியது.

ஏற்கனவே நிலம் அதன் நீர்க் கொள்ளளவை எட்டியிருந்த நிலையில் இம் மேலதிக மழைநீர் போக்கிடமின்றி வெள்ளக்காடாக உருவெடுத்ததில் நீர்நிலைகள் மாசடைந்துள்ளன.

வெள்ள நிவாரணப் பணிகளில் நான் ஈடுபட்டிருந்தபோது பல்வேறு பகுதிகளிலுமுள்ள கிணறுகளில் மலக்குழிக் கழிவுநீர் கலக்கும் அபாயம் என்னால் உணரப்பட்டுள்ளது.

கிணறுகளில் குளோரின் இட்டுத்தொற்று நீக்குவதும், கிணற்று நீரை இறைப்பதும் அவசியமானவை. எனினும் இவை மாத்திரமே பாதுகாப்புக்குப் போதுமானவையல்ல.

வெடிப்புகளையும் துளைகளையும் கொண்ட மயோசின் சுண்ணாம்புப் பாறைகளினூடாக கிணற்றுக்குள் கசியும் நிலத்தடி நீர் இன்னும் சில வாரங்களுக்கேனும் கிருமிகளைக் காவிவரும் அபாயம் உள்ளதால் கொதித்து ஆறிய நீரே முழுப்பாதுகாப்புக்கான உத்தரவாதமாகும்.

வெள்ளச் சேதம் அதிகமானதற்கு வெள்ளநீர் உடனடியாவே கடலைச் சென்றடையக்கூடிய கட்டுமான வசதிகள் எம்மிடம் போதாமையும் ஒரு காரணமாகும் இருக்கின்ற வெள்ள வாய்க்கால்களும் எம்மால் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

பூமி சூடாகுவதன் விளைவாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் வருங்காலத்தில் இன்னும் மோசமான வீரியம் மிக்க புயல்களை உருவாக்குமென ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இப்போதே நாம் விழித்துக்கொண்டு முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின் இயற்கை ஏற்படுத்தப்போகும் பேரனர்த்தங்களில் இருந்து நாம் ஒருபோதும் தப்பமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles