31 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

குருநகரில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் உறுதி

யாழ்ப்பாணம், குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இந்தப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

“விவசாயம் மற்றும் கடற்றொழில் வடக்கு மாகாணத்தின் முக்கியமான தூண்கள்.

இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக யாழ். மாவட்டச் செயலராக நான் பணியாற்றிய காலத்தில் பல்வேறு விடயங்களைச் செய்திருக்கின்றேன். அன்றும் இன்றும் உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலராக இருக்கின்ற சா. சுதர்சனும் இதில் முக்கிய பங்காற்றியிருக்கின்றார்.

கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்ற இராமலிங்கம் சந்திரசேகர், எமது பிரதேசத்தின் மேம்பாடு தொடர்பில் அக்கறையுள்ளவர். அவர் பலவற்றை உங்களுக்காகச் செய்வார்.

கடந்த காலத்தில் உங்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்தப் பகுதிக்கு துறைமுகம் அமைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டபோதும் அது சாத்தியமாகவில்லை. அதன் தேவைப்பாட்டை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். எதிர்காலத்தில் கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து அதைச் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்”- என்றார்.

முன்னதாக இந்த நிகழ்வில் ஆசியுரையாற்றிய குருநகர் புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை – அருட்தந்தை யாவிஸ் அடிகளார் கூறுகையில், வடக்கு மாகாண ஆளுநராக பொருத்தமான ஒருவரைத்தான் நியமித்திருக்கின்றார்கள். அவரை எந்த நேரத்திலும் யாரும் அணுக முடியும். இந்த மாவட்டத்தின் மாவட்டச் செயலராக இருந்து பல அபிவிருத்திப் பணிகளைச் செய்தவர்.

மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளக் கூடிய ஒருவர். அவரது காலத்தில் இந்த மாகாணம் முன்னேற்றமடையும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் யூலியன் சகாயராஜா தனது உரையில், 1990 ஆம் ஆண்டு போர்க்காலத்தில் இந்தப் பகுதியிலிருந்த வெளிச்சவீடு அழிக்கப்பட்டதாகவும் அதை மறுசீரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்தார்.

அத்துடன் துறைமுகத்தையும், இந்தப் பிரதேசத்தின் பிரதான வீதியையும் புனரமைத்துத் தருமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா. சுதர்சன், யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஜே. சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles