மட்டக்களப்புக்கு வருகை தந்த தமிழ் பொதுவேட்பாளருக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தின் நுழைவாயிலான வெருகல் பாலத்திற்கு அருகே மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
பொலிகண்டி முதல் பொத்துவில் வரை தமிழ் பொதுவேட்பாளருக்காக முன்னெடுக்கப்படும் நமக்காக நாம் பிரசார பணி, இன்று மட்டக்களப்பை சென்றடைந்தது.
இன்று காலை, வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர், மட்டக்களப்பு வெருகல் பகுதியில், மேளதாளத்துடன் பா.அரியநேத்திரன் வரவேற்கப்பட்டார்.
தொடர்ந்து மோட்டார் வாகன பேரணியுடன் கதிரவெளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் பொது வேட்பாளர், கதிரவெளி விக்னேஸ்வரா பாடசாலை முன்றலில் இருந்து கதிரவெளி முருகன் ஆலயம் வரை, கலாசார பவனியுடன் அழைத்துவரப்பட்டார்.
அங்கு வழிபாடுகளிலும் தமிழ் பொதுவேட்பாளர் ஈடுபட்டார்.
வாகரை கண்டலடி துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பொதுவேட்பாளர், அங்கிருந்து நமக்காக நாம் பிரசார பணியை ஆரம்பித்தார்.
359 நாட்களாக, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரவையை மீட்டுத் தரக் கோரி, சித்தாண்டியில் முன்னெடுக்கப்படும் தொடர்
போராட்டக் களத்திற்குச் சென்ற பா.அரியநேத்திரன், அங்கிருந்த பண்ணையாளர்களுடன் உரையாடியதுடன், மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை மீட்புக்கான போராட்டம், ஒரு வருட நிறைவை எட்டவுள்ள நிலையில், இன்னமும் தீர்;வினைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கங்கள் முயற்சிக்கவில்லை என்றும்
கவலை வெளியிட்டார்.
1990ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவற்படையினராலும், வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட, சத்துருக்கொண்டான் படுகொலையின் 34வது நினைவு தினமான
இன்றைய தினம், சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத் தூபிக்குச் சென்ற பா.அரியநேத்திரன், உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, இன்று காலை
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத் தூபிக்கு முன்பாக, பொலிஸாரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கும் தனது கண்;டனத்தைப் பதிவு செய்தார்.
மட்டக்களப்பு நகரில் உள்ள, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் திருவுருவச் சிலைக்கும், பா.அரியநேத்திரன்
மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கும் அஞ்சலி செலுத்திய தமிழ்ப் பொதுவேட்பாளர்,
ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கான நீதியை வழங்க, அரசாங்கங்கள் பின்னடிப்பதாகவும் குறிப்பிட்டார்.