இந்தியாவின் பெங்களூரு, கோரமங்கலம் உள்ளக விளையாட்டரங்கில் சனிக்கிழமை (19) இரவு நடைபெற்ற சவூதி அரேபியாவுக்கு எதிரான ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் ஏ குழு போட்டியில் சவூதி அரேபியாவை துவம்செய்த இலங்கை 118 – 5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றது.
ஆரம்பம் முதல் கடைசிவரை மிகுந்த வேகத்துடனும் விவேகத்துடனும் விளையாடிய இலங்கை முதலாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியை 27 – 2 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கியது.
தொடர்ந்து இரண்டாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அப் பகுதியை 32 – 0 என தனதாக்கியது. இதற்கு அமைய இடைவேளையின்போது இலங்கை 59 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.
இடைவேளைக்குப் பின்னர் மூன்றாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியையும் இலங்கை 32 – 1 என தனதாக்கிக்கொண்டது. இந் நிலையில் 76 கோல்களை மொத்தமாக போட்டிருந்த திசலா அல்கமவுக்கு 4ஆவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் ஓய்வு வழங்கப்பட்டது.
எனினும் ஹசித்தா மெண்டிஸ் 13 கோல்களையும் ரஷ்மி பெரேரா 14 கோல்களையும் போட அப் பகுதியை 27 – 2 என்ற கோல்கள் தனதாக்கி ஒட்டுமொத்தமாக 118 – 5 எனற் கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது.
திசலா அல்கமவை விட கோல் நிலையில் திறமையாக விளையாடிய ஹசித்தா மெண்டிஸ் 16 கோல்களையும் ரஷ்மி பெரேரா 24 கோல்களையும் போட்டனர். இலங்கை தனது 3ஆவது போட்டியில் வரவேற்பு நாடான இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை (20) எதிர்த்தாடவுள்ளது.