தமது கருத்து, கொள்கைக்கு இணங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சிறந்த அரசியல்வாதி சனத் நிஷாந்த என்றும் அந்த அர்ப்பணிப்பை நாம் மதிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அவரது மரணத்தின் பின்னர் அவர் தொடர்பில் வெளியிடப்பட்ட சில கருத்துகள் கவலை கொள்ளத்தக்கவை என தெரிவித்த அமைச்சர், பௌத்த மதம் உள்ளிட்ட எந்த மதங்களும் அவ்வாறு போதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அமரர் சனத் நிஷாந்தவின் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
“சனத் நிஷாந்த நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக சிறந்த சேவையை வழங்கியவர்.
கிராமியமட்ட மக்களின் மனங்களை வென்றவர். அவருடைய அர்ப்பணிப்புள்ள சேவையும் கண்ணியமும் பாராட்டத்தக்கவை.
உண்மையில் அவர் சிறந்த திறமை படைத்தவர். அவரது நான்கு பிள்ளைகளுக்கு சிறந்த தகப்பனாகவும் அவரது மனைவிக்கு சிறந்த கணவராகவும் நாட்டுக்கும் கௌரவமான வகையில் சேவை செய்த சிறந்த மனிதராக அவரைக் குறிப்பிட முடியும்.
ஒருவர் உயிருடன் வாழும்போது அவரைப் பற்றி நாம் பெரிதாக பேசா விட்டாலும், அவர் எம் மத்தியில் இல்லாத போது அவர் தொடர்பில் அவர் செய்த நல்லவைகளை நாம் பாராட்டுவது முக்கியமாகும்.
அந்த வகையில் சனத் நிஷாந்த புதிய சிந்தனைகளைக் கொண்டவர். தனது அனைத்து செயற்பாடுகளையும் முகாமைத்துவம் செய்து சிறப்பாக முன்னெடுத்தவர். அவரது கருத்துக்கு இணங்க செயற்பட்டவர். அந்த வகையில் அவரது செயற்பாடுகளை நாம் மதிக்க வேண்டும்” என்றார்.