ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 56 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.இவர் இலங்கையின் 9-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் காணப்படுகிறார்.அநுர குமார திசாநாயக்க இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார். இவரது தந்தை ஒரு அலுவலக ஊழியர். இவருக்கு ஒரு சகோதரி உள்ளார்.
அநுர குமார தனது பாடசாலைக் கல்வியை தம்புத்தேகமை காமினி மகா வித்தியாலயத்திலும்இ, தம்புத்தேகமை மத்திய கல்லூரியிலும் கற்றார். தனது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவராக இவர் விளங்கினார். பாடசாலை நாட்களிளில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக விளங்கிய அநுர குமார அக்கட்சியில் 1987 இல் இணைந்து மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.
1987-89 ஜேவிபி புரட்சியின் தொடக்கத்துடன் 1987 முதல் முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பிறகு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறினார். ஓராண்டு கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு 1995 இல் இளம் அறிவியல் பட்டத்துடன் வெளியேறினார்.
அநுர குமார 1995 இல் சோசலிச மாணவர் சபையின் தேசிய அமைப்பாளராகவும், மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 1998 இல் மக்கள் விடுதலை முன்னணியின் அரசாயத்திற்கு நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் கீழ் மீண்டும் நாடாளுமன்ற அரசியலில் நுழைந்த மக்கள் விடுதலை முன்னணி 1994 நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசை ஆதரித்தது. இருப்பினும் கட்சி பின்னர் குமாரதுங்க நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தது.
அநுர 2000 பாராளுமன்றத் தேர்தலை அடுத்து கட்சியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் சென்றார். 2001 தேர்தலில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினரானார்.2004 இல் மக்கள் விடுதலை முன்னணி இலங்கை சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் 2004 தேர்தலில் போட்டியிட்டு 39 இடங்களை நாடாளுமன்றத்தில் கைப்பற்றியது. அநுர குமார குருணாகல் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
குமாரதுங்கவின் அமைச்சரவையில் விவசாயம் கால்நடைகள் நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக 2004 பெப்ரவரியில் நியமிக்கப்பட்டார். 2005 ஜூன் 16 இல் அவர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அமரசிங்க ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அரசின் சர்ச்சைக்குரிய விடுதலைப் புலிகளுடனான வட கிழக்கு மாகாணங்களின் சுனாமி நிவாரண ஒருங்கிணைப்புப் பொறிமுறையை எதிர்த்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அமரசிங்க எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து மற்ற மக்கள் விடுதலை முன்னணி அமைச்சர்களுடன் சேர்ந்து அநுரவும் 2005 ஜூன் 16 இல் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்தார். பின்னர் செப்டம்பர் 2015 முதல் டிசம்பர் 2018 வரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடாவாகப் பணியாற்றினார்.
2014 பெப்ரவரி 2 அன்று மக்கள் விடுதலை முன்னணியின் 17ஆவது தேசிய மாநாட்டின் போது சோமவன்ச அமரசிங்கவிற்குப் பின் கட்சியின் புதிய தலைவராக அநுர குமார திசாநாயக்க நியமிக்கப்பட்டார்.2019 ஓகஸ்ட் 18ஆம் திகதியன்று மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசியல் கூட்டமைப்பான தேசிய மக்கள் சக்தி 2019 ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க தனது ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என்று அறிவித்தது. இத்தேர்தலில் திசாநாயக்க 418,553 (3%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
2023 ஓகஸ்ட் 29 அன்று அநுர குமார திசாநாயக்க மீண்டும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவித்தது. தொடரும் இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் முந்தைய அரசாங்கங்களின் அதிருப்தியைப் பெருமளவில் தனது பரப்புரையில் பயன்படுத்தி தேர்தலில் 5,634,915 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றார்.