வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க மேடையில் கூறியவைகளை நடத்திக் காட்டுவதில் தோல்வி கண்டுள்ளார் என்பதை அவரே நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுகத்திலிருந்து ஒரு விலைக்கு எரிபொருள் இறக்கப்பட்டு மற்றொரு விலைக்கு மக்களுக்கு விற்கப்படுகிறது.அதிக வரி ஊழல் மோசடி திருட்டு போன்ற காரணங்களே இதற்குக் காரணமாகும். எனினும் ஆட்சிக்கு வந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் கூறிய எரிபொருள் மோசடியை நிறுத்த முடியாது போயிருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.கனியவள கூட்டுத்தாபனத்தில் நடந்த ஊழல்களைக் கண்டுபிடிக்க முடியாது என்று அந்த நிறுவனத்துக்கு ஜனாதிபதி நியமித்த புதிய தலைவர் கூறுகிறார்.
நிதியமைச்சின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே எரிபொருள் விலையைக் குறைக்க முடியும். எரிபொருள் விலை குறைந்தால் நாடு வங்குரோத்தடைந்து விடும் என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறும்போது ஜனாதிபதி அனுர உட்பட ஜே.வி.பி.யின் முன்னணி தலைவர்கள் பொய்களைக் கூறித் திரிகின்றனர்.அதேநேரம் அரச உத்தியோகத்தர்களின் வேதனத்தை அதிகரிக்காத இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்களுக்கு வேதன அதிகரிப்பை வழங்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.