இலங்கையின் 17ஆவது பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கு நாளையதினம் மக்கள் வாக்களிக்கவுள்ளார்கள். வழமைக்குமாறாக இந்தத் தடவை பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின்போது பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் உற்சாகம் குறைந்து காணப்பட்டதால் வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 35 இலட்சம் வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை பயன்படுத்தவில்லை.
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி அரசாங்கத்தை அமைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பாராளுமன்றத்தில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கு ஆணை தருமாறு மக்களைக் கேட்கும் எதிரணி கட்சிகளுக்கு எந்தளவு ஆசனங்கள் கிடைக்கும் என்பதை ஊகிப்பது சற்று சிரமமாக இருக்கிறது. இரு மாதங்களுக்கும் குறைவான காலத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் தலைமை தாங்குகின்ற கூட்டணிகளின் பிரசாரங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் ஒன்றரை மாத கால நிருவாகத்தின்மீது குறைகண்டு பிடிப்பதிலேயே முழுமையாகக் கவனத்தைச் செலுத்தியிருந்தன.
அவை மக்கள் மத்தியில் எடுபட்டிருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை. இது இவ்வாறிருக்க, வடக்கு – கிழக்கில் முன்னென்றும் இல்லாத அளவுக்கு அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் போட்டியிடுவதால் நாளைய தினம் தெரிவு செய்யப்படவிருக்கும் பாராளுமன்றத்தில் ஓர் ஒழுங்கமைவான பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்கள் கொண்டிருக்கக்கூடிய வாய்ப்புப் பெரும்பாலும் இல்லை என்று அஞ்சப்படுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் 28 பாராளுமன்ற ஆசனங்களுக்காக கட்சிகளையும் சுயேச்சை குழுக்களையும் சேர்ந்த 2 ஆயிரத்து 67 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பெரும்பாலும் தமிழ்க் கட்சிகள் ஒவ்வொன்றும் ஓரிரு ஆசனங்களுடன் பாராளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பே இருக்கிறது.
அதனால் அடுத்த பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரச்னைக ளுக்காக குரல் கொடுப்பதற்கு ஒருமித்த அணுகுமுறையை கடைப்பிடிப்பதற்காக இந்தக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் தோன்றும். ஆனால், அதற்குத் தேவையான அரசியல் விவேகத்தையும் பக்குவத்தையும் அவர்கள் வெளிக்காட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. தமிழ் மக்களுக்கு உருப்படியான மாற்றுத்தெரிவு இல்லாமல் இருக்கின்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் வடக்கு, கிழக்கில் போட்டியிடுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகள் மத்தியில் ஒப்பீட்டளவில் முக்கியமானவை என்று அடையாளப்படுத்தக் கூடியவையாக இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவையே விளங்குகின்றன. இந்த அணிகளுக்கு இடையில் கொள்கை கோட்பாடுகளை பொறுத்தவரை பெரிதாக வேறுபாடுகள் இல்லை. தமிழ் மக்களின் அரசியல் விடுதலையே தங்கள் குறிக்கோள் என்று அவை பிரகடனம் செய்திருக்கின்றன.
ஆனால், தமிழ் மக்களை பொறுத்தவரை, இன்று தேவைப்படுவது கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு பொருத்தமான நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான அரசியல் அணுகு முறைகளை கடைப்பிடிக்கக்கூடிய அரசியல் அணியேயாகும். தமிழ் மக்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதில் விவேகமாக செயல் படுவார்கள் என்று ‘ஈழநாடு’ உறுதியாக நம்புகிறது. முக்கியமாக தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சிதறடிக்கும் நோக்குடன் பல்வேறு குழுக்களையும் களத்தில் இறக்கிய சக்திகளுக்கு தமிழ் மக்கள் முறையான பாடத்தை புகட்டவேண்டும் என்பதும் வாக்களிப்பில் அசமந்தம் காட்டாமல் அவர்கள் தங்கள் வாக்குரியையை பயன்படுத்த வேண்டும் என்பதுமே எமது அன்பான வேண்டுகோளாகும்.