ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வருடத்திற்கான தேசிய சுப்பர் லீக் (NSL) கிரிக்கெட் போட்டியில் காலி அணி தோல்வி அடையாத அணியாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. காலி, கண்டி, தம்புள்ளை, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய பெயர்களிலான 5 அணிகள் பங்குபற்றிய இந்த தேசிய சுப்பர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் போட்டி 2 சுற்றுகளைக் கொண்ட லீக் அடிப்படையில் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று இரண்டு தடவைகள் எதிர்த்தாடிய இந்த சுற்றுப் போட்டியின் லீக் சுற்றில் 8 போட்டிகளில் 4 வெற்றிகள், 4 வெற்றிதோல்வியற்ற முடிவுளுடன் இறதிப் போட்டிக்கு காலி முன்னேறியது. கண்டி அணி தனது 8 போட்டிகளில் 3 வெற்றிகள், 3 தோல்விகள், 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகள் என்ற பெறுபேறுகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளாலும் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டபோதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் கண்டியை குறைந்த எண்ணிக்கைக்கு கட்டுப்படுத்திய காலி 7 விக்கெட்களால் வெற்றிபெற்று சம்பயினானது.
தேசிய வீரர்கள் பெரிய அளவில் இடம்பெறாத இறுதிப் போட்டியில் காலி சார்பாக ரமேஷ் மெண்டிஸ், ஓஷத பெர்னாண்டோ, லக்ஷான் எதிரிசிங்க ஆகியோர் துடுப்பாட்டத்திலும் நிஷான் பீரிஸ், அசன்க மனோஜ் ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர். கண்டி சார்பாக சஹான் கோசல, சித்தார கிம்ஹான், அஷேன் டெனியல் அகியோர் துடுப்பாட்டத்திலும் சித்தும் திசாநாயக்க, நிம்சர அத்தரகல்ல, லசித் எம்புல்தெனியா ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையாக செயல்பட்டனர்.
முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தன. முதல் இன்னிங்ஸ் நிறைவில் 12 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த காலி கழகம் 2ஆவது இன்னிங்ஸில் கண்டி அணியை 163 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது. இதனை அடுத்து 176 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்ட இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய காலி 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.